Thursday 13 June 2013

"மரண மாத்திரை"

                                               RAYMOND CHOW -வுடன் ப்ரூஸ் லீ!!

ப்ரூஸ் லீயை பற்றி சமீபத்தில் படித்த ஒரு தகவல் அடியேனை மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது.ப்ரூஸ் லீ அமெரிக்காவில் பிறந்த சீனர்.ஆரம்ப காலத்தில் தொலைகாட்சி தொடர்களில் நடித்தவர்,பிறகு ஹாங்-காங் சைனீஸ் படங்களில் நடித்து உலக புகழ் எய்தியவர்.அவர் நடித்த மொத்த படங்களே வெறும் ஆறு படங்கள்தான்.ஆறாவது படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ,மர்மமான முறையில் ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தார்...........இத்யாதி....இத்யாதி....தகவல்கள் அல்ல...இவையெல்லாம் இந்த உலக உருண்டையில் வசிக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் தெரிந்த தகவல்கள்தான்.....அடியேன் சொல்லவந்தது இவற்றையல்ல......ப்ரூஸ் லீயின் மரணத்திற்கு காரணமாயிருந்த ஒரு மாத்திரையை பற்றி...!!!

ப்ரூஸ் லீ கடந்த 1973ஆம் வருடம் ,ஜூலை 20அன்று திடீரென்று இறந்தார்.அவரது மரணம் உலகம் முழுதும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மக்கள் பொது இடங்களில் கூடி கதறி அழுதார்கள்.பல இடங்களில் "ப்ரூஸ் லீ கொல்லப்பட்டார்"என்ற வதந்தி பரவியதால் ,அவரது ரசிகர்கள் வன்முறையிலும் ஈடுபட்டனர்.ப்ரூஸ் லீ விஷமிடப்பட்டு கொல்லப்பட்டார் என்ற வதந்தி கிட்டதட்ட உலகம் முழுதும் பரவியதால் பெரும் குழப்பமும்,பதட்ட சூழ்நிலையும் ஏற்பட்டன.அரசுகள் செய்வதறியாது திகைத்தன.பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்னையாக ப்ரூஸ் லீயின் திடீர் மரணம் உருவெடுத்தது.

ப்ரூஸ் லீ தனது படங்களில் தற்காப்பு கலையான "குங்-பூ"வை பயன்படுத்தியதால் கோபம்கொண்ட சில "சைனீஸ் மாஸ்டர்கள்"அவரை விஷமிட்டு கொன்றுவிட்டார்கள் என்ற பிரதான வதந்தி (தற்போதும் இந்த வதந்தி உயிரோடு இருக்கிறது!!!)அங்கிங்கென்றில்லாமல் எங்கெங்கும் பரவியதால் அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்றறிய ஹாங்-காங் அரசு ஒரு மருத்துவர் குழுவை நியமித்தது.அந்த குழுவில் மொத்தம் மூன்று டாக்டர்கள் நியமிக்கப்பட்டார்கள்.ஒருவர் சீனர்.இன்னொருவர் பிரிட்டிஷ்காரர்.மற்றொருவர் அமெரிக்கர்.

இந்த மூவர் குழு ப்ரூஸ் லீயின் உடலை தனி தனியாக போஸ்ட் மார்ட்டம் செய்தது.மூவருமே தங்கள் பரிசோதனை முடிவை அரசுக்கு தனி தனியே அனுப்பி வைத்தார்கள்.இந்த மூன்று பிரேத பரிசோதனை அறிக்கைகளும் ப்ரூஸ் லீயின் மரணத்தை பற்றி ஒரே மாதிரியான முடிவையே தெரிவித்தன.

1.ப்ரூஸ் லீ -யின் மரணம் இயற்கையானது.
2.ப்ரூஸ் லீ விஷமிடப்பட்டு கொல்லப்படவில்லை.
3.ப்ரூஸ் லீயின் உடலில் எந்த விஷமும் காணப்படவில்லை.உள்காயங்களோ,வெளிக்காயங்களோ எதுவும் இல்லை.
4.ப்ரூஸ் லீ கடும் தலைவலிக்காக சாப்பிட்ட மாத்திரையின் பக்க விளைவினால் (SIDE EFFECT)அவர் மரணமடைந்தார்.

ப்ரூஸ் லீயின் முதலாளியும்,புகழ்பெற்ற "GOLDAN HARVEST பட நிறுவனத்தின் அதிபருமான ரேமாண்ட் சோ (RAYMOND CHOW),ப்ரூஸ் லீ இறப்பதற்கு சில மணி நேரத்திற்குமுன் சர்ச்சைக்குரிய "அந்த மாத்திரையை"உட்கொண்டதாக விசாரணை குழுவிற்கு சாட்சியளித்தார்.ப்ரூஸ் லீயின் மனைவி லிண்டாவும் தனது கணவர் தொடர்ந்து அந்த மாத்திரையை சாப்பிட்டு வந்ததாக சாட்சியளித்தார்.இதே போன்ற ஒரு சாட்சியை விசாரணை குழுவில் அளித்த மற்றொரு பிரபலம் அப்போதைய ஜேம்ஸ் பாண்ட் நடிகரான ஜார்ஜ் லேசன்பி!!

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உடனடியாக அந்த மாத்திரை தடை செய்யப்பட்டது.மாவீரன் ப்ரூஸ் லீயை கொன்ற அந்த மாத்திரைகள் பொது இடத்தில் கொட்டப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது.மாத்திரையை தயாரிக்கும் ஜெர்மானிய நிறுவனம் செய்வதறியாமல் திகைத்தது.நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகே அந்நிறுவனத்தின் மீதான தடைகள் நீக்கப்பட்டன.

அதெல்லாம் சரி.....ஆனானப்பட்ட ப்ரூஸ் லீயையே "போட்டு தள்ளிய"அந்த மாத்திரை என்னவோ...?என்று கேட்கிறீர்களா.....?அந்த "கொலைகார"மாத்திரை....

                        "ASPIRIN "....!!!