Sunday 20 July 2014

"பூம் பூம் படலம்...!""இஸ்மவேல் துஷ்ட மனுசனாயிருப்பான்.அவனுடைய கரங்கள் எல்லோருக்கு விரோதமாயும்,எல்லோருடைய கரங்களும் அவனுக்கு விரோதமாயும் இருக்கும்." 
                                                                                                                                        -   பழைய ஏற்பாடு.
இஸ்ரேல் யூதர்கள் !

பாலஸ்தீன அரேபியர்கள் !  


பாலஸ்தீன நகரமான காஸாவை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. "ஹமாஸ்" என்ற தீவிரவாத இயக்கத்தினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் இத்தாக்குதல் குறித்து உலகின் பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையிலும் அதைப்பற்றி துளியும் கவலைப்படாமல் இஸ்ரேல் ராணுவம்  தொடர்ந்து காஸா நகரத்தின் மீது குண்டு மழை பொழிந்து வருகிறது.13-நாட்களாக தொடரும் இத்தாக்குதலில் சுமார் 300 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இஸ்ரேலுக்கும்,பாலஸ்தீன அரேபியர்களுக்கும் இடையே நடக்கும் இம்மோதலுக்கு வழக்கம்போல இந்திய ஊடகங்கள் "மத சாயம்"பூச முயன்று வருகின்றன.பாலஸ்தீன அரேபியர்களை "அப்பாவி முஸ்லிம்"களாகவும்,அவர்களை தாக்கும் இஸ்ரேலை "யூத இனவெறி"யர்களாகவும் சித்தரிகின்றன. இந்திய முஸ்லிம்கள் மத்தியில் மத ரீதியான பதற்றத்தை ஏற்படுத்தி இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களையும் திட்டமிட்டு தூண்டி வருகின்றன.இதன் உடனடி விளைவாக "எங்கயோ போற மாராத்தா.எம்மேல வந்து ஏறாத்தா"என்பதுபோல இங்கேயுள்ள லெட்டர்பேட் முஸ்லிம் அமைப்புகள் சம்பந்தமில்லாமல் போராட்டம்,ஆர்பாட்டம்,சாலை மறியல்,இஸ்ரேல் கொடி எரிப்பு போன்ற அடாவடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.


மேற்படி "தேச பக்த"திலகங்களின் போராட்டங்களுக்கு தூபமிடும் வகையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வீற்றிருக்கும் எதிர்கட்சி கண்மணிகளும் தங்களால் முடிந்த அளவுக்கு எரிகிற தீயில் பெட்ரோல் ஊற்றும் விதமாக இஸ்ரேலுக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்புகின்றன.


போதாக்குறைக்கு,காஷ்மிர் மாநிலத்தின் பிரிவினைவாத அமைப்புகளும் "இஸ்ரேல் ஆக்கிரமிப்பு"க்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே இந்திய ராணுவ வீரர்களை தாக்கி வருகின்றன.பாலஸ்தீன பூர்வ குடிகளான (!) அரேபியர்களை "வந்தேறி" யூதர்கள் தாக்குவதாக கூறி ஏக அமளி துமளி செய்கின்றன.காஷ்மிர் மாநிலத்தின் பூர்வ குடிமக்களான "ராஜ்புத்களும்,சரஸ்வத்களும்,சபர்வால்களும்" அங்கேயிருந்து விரட்டியடிக்கப்பட்டு ஜம்மு,சண்டிகர்,டெல்லி போன்ற இந்திய நகரங்களில் (!) அகதிகளாக வாழ்ந்துவரும் நிலையில் இந்த பயங்கரவாத அமைப்புகள் இஸ்ரேலை ஆக்கிரமிப்பாளனாக சித்தரித்து குய்யோ முறையோ என்று கூப்பாடு போடுகின்றன. என்ன நியாயம் பாருங்கள்.


காஸா மீது சரமாரி தாக்குதல் !


அடியேனை பொறுத்தவரை இஸ்ரேலின்  இந்த தாக்குதல் நியாயம்தான் என்பேன்.பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் சர்வதேச பொது ஜன அபிப்ராயத்தை இஸ்ரேல் ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை.காரணம்,பாதிக்கப்படுபவர்கள் இஸ்ரேலிய மக்களே ஒழிய, போரை நிறுத்த சொல்லும் மனித நேய மாமணிகள் அல்ல.தனது நாட்டு பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையிலும் அந்நிய தலையீட்டை இஸ்ரேல் விரும்புவதில்லை!


குண்டு வீச்சில் சிதறும் மேற்கு கரை நகரம் காஸா !இஸ்ரேலின் அனைத்து பிரஜைகளும் ராணுவ பயிற்சி பெற்றவர்கள்.18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆணாகிலும்,பெண்ணாகிலும் கட்டாய ராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது.ஆக ,அந்நாட்டின் மொத்த மக்களும் சீருடை அணியா சிப்பாய்களே. எனவே முழு அளவிலான போர் மூண்டால் வெற்றி பெறப்போவது இஸ்ரேலே!


இஸ்ரேல் ராணுவ தலைமை தளபதி பென்னி ஹான்ட்சுடன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு !


ஜெயிக்கும் அணியை ஆதரிப்பதே நம்மூர் வழக்கம்.ஆனால்,தோற்கும் அணியில் இடம்பெறுபவர் இங்கே கொழுத்த வாக்கு வங்கியாய் இருந்து தொலைப்பதால் இங்குள்ள அரசியல் கட்சிகள் பாலஸ்தீன தீவிரவாதத்தை ஆதரிக்கின்றன.இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தத்தை மத மோதலாக வருணிக்கின்றன.அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றார்களே என அங்கலாய்க்கின்றன.ஈ.வெ.ரா&கோ,கார்ல் மார்க்ஸ் & கம்பெனி,காந்தி&நேரு வகையறா கும்பல்களிலிருந்து நம்ம ஊர் திருமா வரை ஆளுக்காள் கருத்தும்,கண்டனமும் தெரிவிக்கும் இந்த "காஸா யுத்தம்" உண்மையில் மத மோதலுமல்ல.இந்த யுத்தம் இப்போது ஆரம்பித்ததுமல்ல!


யூத இனமும்,அரேபிய இனமும் உண்மையில் சகோதர இனங்கள்.இவ்விரு இனங்களும் பைபிள் பழைய ஏற்பாடு ஆதியாகமத்தில் கூறப்பட்டுள்ள "ஆப்ரஹாம்" என்ற நாடோடி ஆட்டிடையனின் வழிதோன்றல்கள். ஆப்ரஹாம் "யாஹ்வே" என்ற தெய்வத்தின் கட்டளைப்படி அஸ்ஸிரியாவின் "உர்" என்ற நகரத்திலிருந்து வெளியேறி தனது மனைவி சாராளுடன் பாலஸ்தீனத்தில் குடியேறினான்.அங்கே எகிப்து நாட்டை சேர்ந்த ஹாகார் என்ற பெண்ணை மணந்து அவள் மூலமாக ஒரு ஆண் குழந்தையை பெற்றான்.அக்குழந்தைக்கு "இஸ்மவேல்" என்று பெயர். சிறிது காலம் கழித்து அவனது மனைவி சாராள் மற்றொரு ஆண் குழந்தையை பெற்றாள்."ஈஸாக்" என்ற பெயரையுடைய அக்குழந்தையை ஆபிரஹாமின் தெய்வமான "யாஹ்வே" ஆசிர்வதித்து அவன் சந்ததிக்கு பாலஸ்தீன தேசத்தை உடமையாக்கினார்.ஆபிரஹாமின் மூத்த மகனான இஸ்மவேலை பாலஸ்தீன தேசத்தை விட்டு வெளியேற்றினார்!


ஆபிரஹாமின் இளைய மகன் "ஈஸாக்கின்" வம்சத்தில் வந்தவர்களே  இஸ்ரவேலர் எனப்படும் யூத இனத்தவர். ஆபிரஹாமின் மூத்த மகனும்,பாலஸ்தீனத்திலிருந்து (கடவுளால்) விரட்டப்பட்டவனுமான "இஸ்மவேல்" என்பவனது வம்சத்தில் பிறந்தவர்களே அரேபிய இன மக்கள்.இவ்விரு இனத்தவருக்கும் இடையிலான "இனப்பகை"க்கு காரணம் பாலஸ்தீன மண்.அதற்கு சொந்தம் கொண்டாடியே தங்களுக்குள் அடித்து கொள்கிறார்கள்.இவ்விரு இனங்களும் தோன்றிய காலத்திலேயே இவர்களுக்கிடையிலான யுத்தமும் தோன்றிவிட்டது!


பழைய ஏற்பாட்டின்படி ஆபிரஹாம் வாழ்ந்த காலம் கி.மு.3000!


ஆம், யூதர்களுக்கும்,அரேபியர்களுக்கும் நடந்துவரும் இந்த யுத்தத்தின்   வயது ......

"5000...!"