Saturday 6 December 2014

யுனைடட் ஸ்டேட்ஸ் ஆஃப் "அம்மா"ரிக்கா

ஒரு அவசர முன்குறிப்பு  1 : இந்த பதிவு சில மாதங்கள் முன்னால் பதிவேற்றப்பட்டது . தமிழக சட்டமன்றக் கூட்டம் நடந்துவரும் நிலையில் இப்பதிவு பொருத்தமாக இருக்கும் என்பதால் மறுபதிவாக அவதரிக்கிறது !!!அவசர முன்குறிப்பு  2 : அநேகமாக இப்பதிவால் தமிழக அரசியல் கட்சிகள்  கொந்தளித்து அடியேனுக்கு எதிராய் போராட்டம் நடத்தும் வாய்ப்பிருக்கிறது.
சட்டசபையிலும் கண்டன தீர்மானம் கொண்டுவரப்படலாம்.காவல் துறை மூலம் என்னை கைது செய்து சிறையிலும் அடைக்க ஆளும் கட்சி முயலலாம்.இதன்மூலம் பொதுமக்களின் அனுதாபம் கிட்டலாம்.சமூக வலையர்கள் அடியேனை ஆதரித்து பிரச்சாரம் செய்யலாம். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் பதவிக்கு என்னை முன்னிறுத்தலாம். தேர்தலில் மாபெரும் வெற்றிவாகை சூடி தமிழகத்தின் முதல்வராக அடியேன் பொறுப்பேற்கலாம். "இதெல்லாம் நடக்கற கதையா" என்று சந்தேகிப்பவர்கள் தயவு செய்து மேற்கொண்டு படிக்காதீர்கள். ஹி ஹி !!! 


யு.எஸ்.ஸை திராவிட கட்சிகள் ஆண்டால் .......?


குலைநடுங்க வைக்கும் ஒரு குரூர கற்பனை !!!

உலகின் மிகப்பெரிய பணக்கார திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏறக்குறைய முடிந்துவிட்டது. வட இந்தியர், தென் இந்தியர், கிழக்கு இந்தியர், மேற்கு இந்தியர், வட கிழக்கு இந்தியர், தென் கிழக்கு இந்தியர், வட மேற்கு இந்தியர், தென் மேற்கு இந்தியர் என்று எட்டுதிக்கு இந்தியர்களும் மானாவாரியாக வரிசையில் நின்று மாங்கு மாங்கென்று வாக்களித்துவிட்டு தேர்தல் முடிவை பற்றி சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் "கோச்சடையான்" எப்ப ரிலீஸ் என்ற கவலையில் ஆழ்ந்துவிட்டார்கள். கழகங்கள் கோலோச்சும் புண்ணிய பூமியான தமிழகத்தில் வரலாறு காணாத "பண மழை"யுடன் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது இரு கழக பேச்சாளர்களும் "லேடியா...? டாடியா...?"பாணியில் "மோதி"க்கொண்டு காதில் செந்தமிழை பாய்ச்சினார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிமுக-பேச்சாளர் ஒருவர் "எங்கள் தலைவி இந்திய பிரதமர் பதவி என்ன...அமெரிக்க அதிபர் பதவிக்குக்கூட தகுதியானவர் " என்று திருவாய் மலர்ந்தருளினார். அந்த ஆசாமிக்கு அமெரிக்கா மீது அப்படியென்ன "கொலவெறி" என்றெல்லாம் புத்திசாலித்தனமாக  சிந்திக்காமல் ஒருவேளை அமெரிக்க நாட்டில் நம்ம ஊரு கழகங்கள் ஆட்சி செய்தால் எப்படியிருக்கும் என்று வழக்கம்போல பித்துக்குளித்தனமாக சிந்தித்தேன்.(நரேந்திர மோதிக்கு விஸா கொடுக்காமல் டபாய்க்கும் அமெரிக்காவை வேறெப்படி பழிவாங்குவதாம்.) லேசுபாசாக சிந்தித்ததற்கே ஏகத்திற்கு கண்ணை கட்டியது!!!

                                                                                                                                                                   

அமெரிக்க செனட் சபையில் பிரஸிடென்ட் ஜெயலலிதா நுழைய அதிமுக செனட்டர்கள் சுமார் 180 டிகிரிக்கு குனிந்து வணங்குகிறார்கள்.சீனியர் செனட்டரும், ஃபைனான்ஸ் செகரெட்டரியுமான பன்னீர் செல்வம் பிரஸிடென்டின் காலில் சாஸ்டாங்கமாக விழுந்து எழுகிறார்!!!

                                                                                                                                                                    ஸ்பீக்கர் தனபால் :   "இன்றைய தினம் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த அமெரிக்க கண்டமே உவகை கொள்ளும் வகையில் புரட்சி தலைவி பிரஸிடெண்ட் அம்மா அவர்கள் ஃபெடரல் செனட் சபைக்கு உரையாற்ற எழுந்தருளியுள்ளார்கள்.பிரஸிடெண்ட் அம்மா அவர்களை "வருக வருக" என வரவேற்பதில் அமெரிக்கன் என்ற முறையில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்".


செனட்டர் பன்னீர் செல்வம்  :    "புரட்சி தலைவி பிரஸிடெண்ட் அம்மா அவர்களின் உலகம் போற்றும் நல்லாட்சியில் அமெரிக்கா பெரும் வளர்ச்சியை கண்டிருக்கிறது. கடந்த ஓராண்டு ஆட்சியில் இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு 0.0012 சதவிதம் உயர்ந்திருக்கிறது. இதே ரீதியில் நாடு பயணிக்குமானால் அடுத்த 4000வருடங்களில் உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசு நாடாகிவிடும்".

        
செனட்டர் தம்பிதுரை  :    "புரட்சி தலைவி பிரஸிடெண்ட் அம்மாவிற்கு முன் அமெரிக்காவை ஆண்ட கனெக்டர் கருணாநிதியின் உலகமகா ஊழல் ஆட்சியில் ஏழை, நடுத்தர, பிற்படுத்தப்பட்ட அமெரிக்கர்கள் சொல்லொனா துன்பத்திற்கு ஆளானார்கள். அதனால்தான் சென்ற தேர்தலில் "முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்" என்ற முதுமொழிக்கேற்ப அமெரிக்க வாக்காள பெருங்குடி மக்கள் கனெக்டர் கருணாநிதியை ஆட்சி பீடத்திலிருந்து விரட்டியடித்துவிட்டு புரட்சி தலைவி அம்மா அவர்களை பிரஸிடெண்ட் நாற்காலியில் அமரவைத்து அழகு பார்க்கிறார்கள்".பிரஸிடென்ட் ஜெயலலிதா :    "நம்மையெல்லாம் வாழவைக்கும் பொன்மன செம்மல் இதய தெய்வம் டாக்டர் புரட்சி தலைவர் ரொனால்ட் ரீகனின் வியர்வையின் வியர்வையான என் உயிரினும் மேலான அன்பு மறுபிறப்புகளே !  உங்கள் அன்பு சகோதரியான நான் அமெரிக்காவின் அதிபராக ஆட்சிப் பொறுப்பேற்றதும் நாடு முழுவதும் " அம்மா வங்கிகள், அம்மா விமான நிலையங்கள், அம்மா ஷாப்பிங் மால்கள், அம்மா சலூன்கள், அம்மா ஹோட்டல்கள்" ஆகியவற்றை ஏழை மக்களின் நலன் கருதி திறந்திருக்கிறேன். இந்த அரசு ஒரு மதசார்பற்ற அரசு என்பதை நிலைநாட்டும் வகையில் வருங்காலத்தில் " அம்மா சர்ச்கள்,  அம்மா மசூதிகள், அம்மா ஷைனகோஹ்குகள், அம்மா குருத்வாராக்களை" கட்டுவேன் என்ற தகவலை இந்த மாமன்றத்தில் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்". ( பலத்த கைத்தட்டல் )


கனெக்டர் கருணாநிதி :    "இளிச்சவாய அமெரிக்கன் ஏமாந்த நேரத்தில் தேர்தலில் தில்லுமுல்லு செய்து ஆட்சியை பிடித்த அம்மையார் , ஏதோ உலக சாதனை செய்துவிட்டதைபோல் தாம்தூம் என்று குதிக்கிறார். ஆட்சிக்கு வந்த மறுநாளே சாமானிய  அமெரிக்கன் பயன்படுத்தும் ஹெலிகாப்டர் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி வெறியாட்டம் போட்டார். பெரும் கட்டண உயர்வினால் ஏழை அமெரிக்கன் ஹெலிகாப்டரை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே , மெர்ஸிடிஸ் பென்ஸில் பயணிக்கும் அவலநிலையை கண்டபோது, இந்த ஏமாளி அமெரிக்கனுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று நினைக்க தோன்றியது. இந்த பாழாய்ப்போன அமெரிக்கன் சுயமரியாதை துளியும் இல்லாதவனாக, பீட்ஸாவால் அடித்த பிண்டமாக இருக்கிறானே என்று எண்ணும்போது , எங்களையெல்லாம் வளர்த்து ஆளாக்கிய பகுத்தறிவு பகலவன், சுயமரியாதை சுடரொளி தந்தை ரூஸ்வெல்ட் இன்று உயிருடன் இல்லையே என்று வருந்துகிறேன்".


செனட்டர் தம்பிதுரை :   "டெக்ஸாஸில் இருந்து திருட்டு ரயிலேறி வாஷிங்டன் வந்திறங்கிய கருணாநிதி இன்று உலகின் பெரும் பணக்காரர். அமெரிக்கர்களிடம் உள்ள மொத்த பணத்தில் பாதி கருணாநிதி குடும்பத்திடம் இருக்கிறது. யு.எஸ்.ஸில் உள்ள ஹெலிகாப்டர் கம்பெனிகள் அனைத்தும் கருணாநிதிக்கு சொந்தம். ஹெலிகாப்டர் கட்டணம் உயர்த்தப்பட்டதே கருணாநிதியின் ஆட்சியில்தான். ஏழை அமெரிக்கன் அதிக கட்டண சுமையால் பாதிக்கப்படக்கூடாதே என்ற உயர்ந்த நோக்கில், பிரஸிடென்ட் அம்மா அவர்கள் அனைத்து ஏழைகளுக்கும் விலையில்லா ஹெலிகாப்டர் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்".  ( அவையில் பலத்த கரகோஷம் )


பிரஸிடென்ட் ஜெயலலிதா :   "புரட்சி தலைவர் பொன்மனசெம்மல் இதயதெய்வம் டாக்டர் ரொனால்ட் ரீகனால் "மக்கள் விரோதி" என அடையாளம் காட்டப்பட்ட கருணாநிதியின் ஆட்சியில் நடந்த ஊழல்கள் ஒன்றா...இரண்டா...? சொல்லி மாளாது. மிஸிஸிபி ஆற்றில் மீன் வளர்த்ததில் ஊழல், அட்லாண்டிக் கடலை ஆழப்படுத்தியதில் ஊழல், பஸிபிக் பெருங்கடலை தூர்வாரியதில் ஊழல்....என்று ஊழலின் உறைவிடமாக விளங்கியவர் கருணாநிதி. குவாண்டனமோ சிறையில் களி திங்கவேண்டிய கருணாநிதி, ஓட்டுக்கு 1000 டாலர் லஞ்சம் கொடுத்து தேர்தலில் முறைகேடாக வெற்றிபெற்று, செனட்டர் என்ற போர்வையில் அமெரிக்க மக்களை என் ஆட்சிக்கு எதிராக திசைதிருப்ப கோயபல்ஸ் பாணியில் உளறி கொட்டுகிறார்".செனட்டர் விஜயகாந்த் :   "இவங்க ஆட்சி மேல அவங்களும், அவங்க ஆட்சி மேல இவங்களும் மாத்தி மாத்தி குற்றஞ்சாட்டிகிட்டே பொழுது போக்கிட்டிருக்காங்க. ஏழை அமெரிக்கனுங்க குடிக்க விஸ்கி இல்லாம சாவறாங்க. நாடு பூரா ஒரே கரண்ட் கட்டு. அமெரிக்காவுல எறங்க வேண்டிய ஏரோபிளேனுங்க இருட்டுல வழி தெரியாம மெக்ஸிக்கோவுல எறங்குதுங்க. டேய்....எவண்டா குறுக்கால பேசறது...? பேத்துருவேன்". 


செனட்டர் வைகோ :   "அன்றொரு நாள் அரிஸோனா மாநிலத்திலே, டூம்ஸ்டோன் நகரத்திலே, O.K.பண்ணையிலே, சீறிவந்த தோட்டாக்களை எதிர்கொண்டு மின்னல் வேகத்தில் துப்பாக்கியை உருவி பகைவர்களை சுட்டு வீழ்த்தினானே....வயார்ட் ஏர்ப்....அவனை போன்ற மாவீரர்களை உறுப்பினர்களாக கொண்ட கழகம்தான் மதிமுக".


செனட்டர் ராமதாஸ் :   "பாட்டாளி அமெரிக்கனுக்கு 10 சதவித இடஒதுக்கீடு தரவில்லையென்றால் அமெரிக்காவில் ஒரு மரம்கூட இருக்காது. செனட்டர் காடுவெட்டியார் தலைமையில் பாட்டாளி அமெரிக்கர்கள் போர்கோலம் பூண்டு கோடாரியுடன் கிளம்பவேண்டிய சூழலை தயவு செய்து உருவாக்கி விடாதீர்கள்".

செனட்டர் திருமாவளவன் :   தலித் அமெரிக்கனுக்கு 15 சதவித இடஒதுக்கீடு வேணும். சட்ட மேதை அண்ணல் ஆபிரஹாம் லிங்கன் கனவு கண்ட சமூகநீதி அப்பதான் உருவாகும்.


கனெக்டர் கருணாநிதி :   "கழக ஆட்சியிலே பிற்படுத்தப்பட்ட அமெரிக்கனுக்கு 50 சதவிதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட அமெரிக்கனுக்கு 50 சதவிதம், தாழ்த்தப்பட்ட அமெரிக்கனுக்கு 50 சதவிதம், ஆதி அமெரிக்கனுக்கு 50 சதவிதம், இஸ்லாமிய சகோதர அமெரிக்கனுக்கு 50 சதவிதம் இடஒதுக்கீடு வழங்கியதை எண்ணிப்பார்த்திட வேண்டும். நேற்றுகூட என் கனவில் தந்தை ரூஸ்வெல்ட்டும், பேரறிஞர் அண்ணன் கென்னடியும் தோன்றி "கௌ-பாய் அமெரிக்கனுக்கு 50 சதவித இடஒதுக்கீட்டை ஏன் வழங்கவில்லை" என்று செல்லமாக என்னை கடிந்து கொண்டார்கள். இப்படியெல்லாம் சமூகநீதியை நிலைநாட்டியும்கூட, பாலஸ்தீன பள்ளத்தாக்கிலிருந்து வந்த வந்தேறிகள் சூழ்ச்சி செய்து ஆட்சியை அபகரித்துக்கொண்டார்கள்".


பிரஸிடென்ட் ஜெயலலிதா :   "கருணாநிதியின் முந்தைய ஆட்சிகாலத்தில் அமெரிக்க பொருளாதாரமே சீரழிந்து கிடந்தது. ஏழை அமெரிக்கர்கள் குளிர்காய டாலர் நோட்டை பயன்படுத்தும் அளவிற்கு டாலர் நோட்டு செல்லாக்காசாக கிடந்தது. எனது தலைமையிலான அதிமுக அரசு அமைந்தபின் நான் எடுத்த துரித நடவடிக்கையின் காரணமாக இன்றைய தினம் டாய்லெட் பேப்பராக உபயோகப்படும் அளவிற்கு டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது".


கனெக்டர் கருணாநிதி :   "அமெரிக்காவை ஏகாதிபத்திய இந்தியாவின் அடிமை நாடாக மாற்றிவிட்டார் அம்மையார்.ஏழை அமெரிக்கனின் தாகம் தீர்க்கும் பெப்ஸி, கோக் போன்ற உள்நாட்டு குளிர்பானங்களின் விற்பனை வீழ்ச்சியடைந்து, பொவன்டோ, லவ்-ஓ போன்ற இந்திய குளிர்பானங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. நியூ யார்க் என்ன செய்யவேண்டும் என்று நியூ டெல்லி ஆணையிடுகிறது. இந்தியா, பங்களா தேஸ், ஸ்ரீ லங்கா போன்ற ஏகாதிபத்திய, பணக்கார, வல்லரசு நாடுகளின்  கைப்பாவையாக அமெரிக்காவை அம்மையார் மாற்றிவிட்டார். போதாக்குறைக்கு அலபாமாவிலே பார்பர் ஷாப்பை இடித்துவிட்டு  ரோமன் சர்ச் கட்டுவோம் என்று கூச்சலிடும் மதவாத சக்திகளுடன் ரகசிய கூட்டு வைத்திருக்கிறார்".


செனட்டர் பன்னீர் செல்வம்  :   "ஆங்கில மொழியின் நம்பர் ஒன் எதிரியே முன்னாள் பிரஸிடென்ட் கருணாநிதிதான். ஆங்கில அன்னைக்கு மணிமண்டபம் கட்டியவர் பிரஸிடென்ட் அம்மா அவர்கள். அமெரிக்க குழந்தைகள் தாய்மொழியாம் ஆங்கிலத்தில் படிக்க சமச்சீர் பாடத்திட்டத்தை அமல்படுத்தியவர் அம்மா அவர்கள். ஆங்கில செம்மொழி மாநாடு என்ற பெயரில் ஊழல் செய்தவர் கருணாநிதி".கனெக்டர் கருணாநிதி :   "ஆங்கில புலவன் அய்யன் ஷேக்ஸ்பியருக்கு சிலை வைத்தவனே நான்தான். பதிமூன்று வயதில் நியூ மெக்ஸிகோவிலே ஸ்பானிஸ் மொழி திணிப்பை எதிர்த்து போராடி சிறை சென்றவன் நான். ரயில் நிலையங்களிலும், விமான நிலையங்களிலும், தபால் நிலையங்களிலும் எழுதப்பட்டிருந்த ஸ்பானிஸ் எழுத்துக்களை கரி பூசி அழித்தவன் நான். மொழிப்போராட்டத்தில் கலந்துகொண்டு  தங்கள் இன்னுயிரை ஈந்திட்ட இளைஞர்களுக்கு கல்லறையை கட்டியவன் நான். அன்னை ஆங்கிலத்தை காத்திட அண்ணன் கென்னடியோடு இணைந்து நாடு முழுவதும் அறவழியில் வன்முறையில் ஈடுபட்டவன் நான். அப்படிப்பட்ட என்னை ஆங்கில விரோதி என்று சொல்வதில் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சியே".


பிரஸிடென்ட் ஜெயலலிதா :   "கருணாநிதியும்,அவரது வாரிசுகளும் கொள்ளையடித்து குவித்துள்ள சொத்துக்களை கைப்பற்றினால் இந்தியாவைவிட அமெரிக்கா பணக்கார நாடாகிவிடும். ஹாலிவுட் படங்களுக்கு கதை வசனம் எழுதிக்கொண்டிருந்த கருணாநிதிக்கு இவ்வளவு சொத்துக்கள் எப்படி வந்தது...?"


கனெக்டர் கருணாநிதி :   "மாதம் ஒரு டாலர் மட்டும் சம்பளம் வாங்கிய அம்மையாருக்கு பல பில்லியன் சொத்துக்கள் எப்படி வந்தது என்று கேட்டு பதிலுக்கு பதில் லாவணி பாடி, அந்த பிரச்னைக்குள் புக நான் விரும்பவில்லை. நான் சற்றொப்ப 75 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரன். "அட்லாண்டிக் சமுத்திரத்தில் அழகிகளோடு சல்லாபி என்றாலும், அமெரிக்காவின் பிரஸிடென்ட் பதவியை ஏற்றுக்கொள் என்றாலும் இரண்டையும் ஒன்றாக கருதுபவன் என் தம்பி கருணாநிதி" என்று பேரறிஞர் அண்ணன் கென்னடி அறுபது ஆண்டுகளுக்கு முன் அலாஸ்கா கழக மாநாட்டிலே குறிப்பிட்டதை அம்மையார் அறிந்திடவில்லை என்று நினைக்கும்போது அரசியல் இப்படி ஆகிவிட்டதே என்று உள்ளபடியே வேதனைப்படுகிறேன்".


பிரஸிடென்ட் ஜெயலலிதா :   "நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து தொடர்ந்து கொட்டப்படும் நீரால் அட்லாண்டிக் கடலின் நீர்மட்டம் உயர்ந்து அமெரிக்காவே முழுகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதற்கு கருணாநிதி ஆட்சிகால குளறுபடிகள்தான் காரணம். கனடா நாடு எவ்வளவு தண்ணீரை வேண்டுமானாலும் நயாகராவில் விடட்டும் என்று எழுதிக்கொடுத்து அமெரிக்காவிற்கு பெரும் துரோகம் இழைத்துவிட்டார் கருணாநிதி".


கனெக்டர் கருணாநிதி :   "நயாகரா நீர்வீழ்ச்சியை இழுத்து மூடவேண்டும் என்று முந்தைய கழக ஆட்சியில் செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றியதே நான்தான். அப்போது அம்மையார் கொலராடோ மாளிகையில் குப்புறப்படுத்து ஓய்வெடுத்து கொண்டிருந்தார் என்பதை மறந்துவிட கூடாது. நயாகரா விவகாரத்தை குறித்து கனடா பிரதமருக்கு இதுவரை மூவாயிரம் மிஸ்டு கால்களை விட்டிருக்கிறேன். அம்மையாரோ, ஒரு மெஸேஜ் கூட அனுப்பியதில்லை".


பிரஸிடென்ட் ஜெயலலிதா :   "கருணாநிதி ஆட்சியில் அமெரிக்க மீனவர்களை கியூபா கடற்படை சுட்டுக்கொன்று வெறியாட்டம் போட்டது. கடலுக்கு மீன் பிடிக்கப்போக அஞ்சி கரையோரத்தில் கருவாடு காயவைத்து பிழைக்க வேண்டிய அவலநிலைக்கு அமெரிக்க மீனவர்கள் ஆளானார்கள்".


கனெக்டர் கருணாநிதி :   "அமெரிக்க மீனவர்கள் பேராசையுடன் அதிக மீன்களை பிடிக்க ஆசைப்பட்டு  எல்லை தாண்டி கியூபா கடலில் மீன் பிடித்ததே அதற்கு காரணம். அப்போது கூட மீனவர்களை சுட்டுக்கொல்ல வேண்டாம், உருட்டுக்கட்டையால் அடித்தால் போதும் என்று மனிதாபிமானத்தோடு கோரிக்கை வைத்தேன். அருமை நண்பர் காஸ்ட்ரோவும் ஆகட்டும் பார்க்கலாம் என்றார்". 


செனட்டர் விஜயகாந்த் :   "கவுண்டி ஷெரிஃப் பதவிக்குக்கூட லாயக்கில்லாத கருணாநிதியும், ஜெயலலிதாவும் பிரஸிடென்ட் பதவியில இருக்குறதால தான் அமெரிக்காவை ஒரு பயலும் மதிக்க மாட்டேங்குறானுங்க. எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க. அமெரிக்காவ இந்தியா மாதிரி வல்லரசு ஆக்கி காட்டுறேன். டேய்....ஏன்டா கத்தறே....ஒக்கார்றா".


செனட்டர் ஸ்டாலின் :   "எங்க டாடி ஆட்சியில நாங்க செஞ்ச சாதனைங்கள இப்ப இந்த லேடி சொந்தம் கொண்டாடறாங்க. எங்க டாடி பிரஸிடென்ட் ஆனவுடனே ஏழை அமெரிக்க விவசாயிங்க வாங்குன 100 மில்லியன் கோடி டாலர் கடன வட்டியோட தள்ளுபடி பண்ணுனாரு. இந்த விவசாய கடன் தள்ளுபடியால வெறும் 1000 ஏக்கர் மட்டும் வெச்சிருந்த ஏழை விவசாயிங்க வவுத்துல எங்க டாடி வோட்கா வாத்தாரு. இந்த லேடி ஆட்சிக்கு வந்ததும் ஏழை விவசாயிங்களுக்கு எங்க டாடி குடுத்த இலவச பங்களாக்கள பறிமுதல் பண்ணிட்டாரு". 

செனட்டர் ராமதாஸ் :   "அமெரிக்கா ஏழை நாடா இருக்குறதுக்கு காரணமே இந்த ரெண்டு கழகங்கள்தான். இனிமே செத்தாலும் இந்த கட்சிகளோட கூட்டணி கிடையாது".


செனட்டர் வைகோ :   "பத்தொன்பதாம் நூற்றாண்டிலே, பிரான்ஸ் தேசத்திலே, ஃபாண்டனாய் யுத்த களத்திலே, முற்றுகையிட்ட ஆங்கிலேய படைகளை பார்த்து, " முதலில் நீங்கள் சுடுங்கள் ஆங்கில கனவான்களே!" என்று வீரமுழக்கமிட்டானே...ஆண்ட்ராச்சே பிரபு....அவனை போன்ற  தியாகிகளை பெற்றிருக்கும் பேரியக்கம்தான் மதிமுக". 

பிரஸிடென்ட் ஜெயலலிதா :   "கருணாநிதியின் முந்தைய ஆட்சியில் அமெரிக்கா முழுவதும் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்தார்கள். நள்ளிரவுக்கு மேல் பெண்கள் அரைகுறை ஆடையுடன் மதுபான விடுதிகளுக்கு செல்லமுடியாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு கெட்டு கிடந்தது. நான் ஆட்சி பொறுப்பேற்றவுடன் பெண்கள் நலன் கருதி 24 மணிநேரமும் செயல்படும் "மகளிர் மதுபான விடுதி"களை திறந்து எப்போது வேண்டுமானாலும் பெண்கள் குடிக்கலாம் என்ற சுதந்திர நிலையை ஏற்படுத்தியிருக்கிறேன்".


கனெக்டர் கருணாநிதி :    "கழக ஆட்சியில் மகளிர் நலனுக்காக "மிஸ்ஸெளரி மேரி அம்மையார் திருமண உதவி திட்டம், கலிபோர்னியா காத்தரின் கல்வி கடன் திட்டம், விஸ்கான்ஸின் விக்டோரியா விதவை மறுவாழ்வு திட்டம், மாண்டனா மார்கரெட் மகளிர் சுயஉதவி திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை அமல்படுத்தியதை அம்மையார் மறந்துவிட்டு பேசுகிறார். மகளிர் நலனுக்காக அல்லும் பகலும் பாடுபடுபவன் நான்.என் மனைவிகளே மகளிர் குலத்துதித்தவர்கள்தான். என்னை பெற்ற அன்னை அஞ்சுகமே ஒரு மகளிர் தான் என்பதை இந்த மன்றத்திலே அறிவிப்பதில் உள்ளபடியே உளமகிழ்கிறேன்".  ( திமுக செனட்டர்கள் பலத்த ஆரவாரம் )


பிரஸிடென்ட் ஜெயலலிதா :   "கடந்தகால கருணாநிதி ஆட்சியில் மின்வெட்டு பிரச்னைகளால் அமெரிக்காவே இருளில் மூழ்கி கிடந்தது. நான் ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுதும் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களில் திடீர் சோதனை நடத்தியபோது, அங்கே உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தும் கருணாநிதி குடும்ப தொழிற்சாலைகளுக்கு திருட்டுத்தனமாக விநியோகிக்கப்பட்டது தெரியவந்தது".


கனெக்டர் கருணாநிதி :   "ஆதாரமின்றி அம்மையார் அடுக்கடுக்காக அவதூறுகளை அள்ளிவீசுகிறார். என் குடும்பத்திற்கு அதிகமாக தொழிற்சாலைகள் கிடையாது. ஒரு மில்லியன் தொழிற்சாலைகளை எடுத்துக்கொண்டால், அதில் வெறும் பத்து லட்சம் தொழிற்சாலைகள் மட்டும்தான் என் குடும்பத்திற்கு சொந்தம்".


பிரஸிடென்ட் ஜெயலலிதா :   "முந்தைய திமுக ஆட்சியில் மத்திய அரசு எந்த அதிகாரமும் இல்லாமல் செயலிழந்து கிடந்தது. மாநிலங்கள் கையில் தான் அனைத்து அதிகாரங்களும் குவிந்து கிடந்தது".


கனெக்டர் கருணாநிதி :    "மாநிலத்திலே ஸ்டேட் ஆட்சி, மத்தியிலே ஃபெடரல் ஆட்சி என்பதே கழகத்தின் நிலைப்பாடு. பேரறிஞர் அண்ணன் கென்னடி "ஸ்டேட் வாழ்கிறது, ஃபெடரல் தேய்கிறது " என்று குறிப்பிட்டாரே , அந்த நிலை இன்றும் மாறவில்லை என்று பார்க்கும்போது " அமெரிக்கன் என்றொரு இனமுண்டு, ஆங்கே அவனுக்கென்று ஒரு குணமுண்டு" என்று பாடிய கவிப்பேரரசர் வால்ட் விட்மனின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது".


பிரஸிடென்ட் ஜெயலலிதா :   "கடந்த திமுக ஆட்சியில் அமெரிக்கா முழுவதும் இனக்கலவரம் நடந்தது. ஏராளமான மாளிகைகள் பற்றியெறிந்தன. ஆயிரக்கணக்கான அப்பாவி ஏழை மக்கள் பங்களாக்களை இழந்து ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தஞ்சம் புகுந்தார்கள். கருணாநிதியின் திறமையற்ற ஆட்சிதான் இதற்கு காரணம்".


கனெக்டர் கருணாநிதி :   "இனம் இரண்டொழிய வேறில்லை என்று சற்றொப்ப ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் பாடிய அனபெல்லா மூதாட்டியின் வாக்கை ஏற்று அமெரிக்கா முழுவதும் " தந்தை ரூஸ்வெல்ட் நினைவு ஈக்குவல் டவுன்"களை கட்டியதே நான்தான். அந்த டவுன்களில் வெள்ளை அமெரிக்கன், கருப்பு அமெரிக்கன், மஞ்சள் அமெரிக்கன், ஊதா அமெரிக்கன், வெல்வெட் அமெரிக்கன், ஆரஞ்ச் அமெரிக்கன் என்று பலதரப்பட்ட இனத்தவரும் கூடி வாழ்ந்ததை கண்ணார கண்டபோது பகுத்தறிவு பகலவன் தந்தை ரூஸ்வெல்ட் கண்ட கனவு கழக ஆட்சியில் நனவானதே என்று பெருமிதப்பட்டவனே நான்தான்". செனட்டர் வீரமணி :   "தந்தை ரூஸ்வெல்ட் மட்டும் பிறந்திருக்காவிட்டால் ஜார்ஜ் வாஷிங்டனே எருமைமாடு தான் மேய்த்துக் கொண்டிருந்திருப்பார். ஆடு மேய்த்த ஏசுவே, தந்தை ரூஸ்வெல்டின் பகுத்தறிவு கருத்துக்களை படித்தபின் தான் பைபிளையே எழுதினார்".


செனட்டர் H.ராஜா :   "பைபிளை எரித்தவர் ரூஸ்வெல்ட். ஆங்கிலம் ஒரு காட்டுமிராண்டி பாஷை என்று சாடியவர் ரூஸ்வெல்ட். பரிசுத்த ஆவியை நம்புபவன் ஒரு பாவி என்று பழித்தவர் ரூஸ்வெல்ட்".  
                                       

கனெக்டர் கருணாநிதி :   "பரிசுத்த ஆவி கூடாதென்பதில்லை எங்கள் கொள்கை. பரிசுத்த ஆவி என்ற பெயரில் பாலஸ்தீனத்திலிருந்து வந்திறங்கிய வந்தேறி கூட்டம் ஒன்று மூடநம்பிக்கையை பரப்புகிறதே, அதை எதிர்ப்பதுதான் எங்கள் கொள்கை. சர்ச் வேண்டாமென்பதில்லை எங்கள் கொள்கை. சர்ச் சர்ச்சைக்குரிய இடமாகிவிடக்கூடாதே என்பதுதான் எங்கள் கொள்கை. "ஒன்றே இனம். ஒருவனே ஆவி" என்று முழங்கிய பேரறிஞர் அண்ணன் கென்னடியின் ஆருயிர் தம்பிகள் நாங்கள். " அபாச்சேயின் சிரிப்பில் அல்லாவை காண்போம் " என்பதே எங்கள் பகுத்தறிவு நிலைப்பாடு.மூதறிஞர் குல்லுகபட்டர் ஹென்றி கிஸ்ஸிஞ்சரே எங்கள் கொள்கையை பாராட்டியிருக்கிறார்".


செனட்டர் வைகோ :   "ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, அசீரியா தேசத்திலே, மாமன்னர் அஸூர்-பானி-பாலின் அரண்மனையிலே, லட்சக்கணக்கான செப்பேடுகளை ஆராய்ந்து கில்காமேஷின் கதையை தேடி கண்டுபிடித்தானே பெருங்கவிஞன் ப்டாஹ்-ஹோடெப்...அவனை போன்ற மேதைகள் நிரம்பிய கழகம்தான் மதிமுக". 

செனட்டர் விஜயகாந்த் :   அமெரிக்கா பூரா சுத்தி வந்துட்டேன்.ஒரு பயகிட்டகூட நயா டாலர் இல்லை. ஒரு நாளைக்கு 8 தடவை சாப்பிட்டுவந்த அமெரிக்கன், இன்னைக்கு வெறும் 7 தடவைதான் சாப்புடுறான். அந்த அளவுக்கு உணவுபஞ்சம் தலை விரிச்சாடுது. டேய்...மரியாதையா சும்மாரு...கரண்டு கம்பத்துல கட்டிவச்சு தோல உரிச்சுருவேண்டா பரதேசி". 

கனெக்டர் கருணாநிதி :   "அமெரிக்கன் என்று சொல்லடா. தலைநிமிர்ந்து நில்லடா" என்று பாடிய பாவேந்தர் பார்க்கர்ஸன்னின் பாடல்களை கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். அம்மட்டோ, சூடு சொரணையில்லாதவனாக, சுயமரியாதையற்றவனாக, நடமாடும் ஸோம்பியாக இன்றைய அமெரிக்கனை பார்க்கும்போது, எப்படியிருந்த அமெரிக்கன் இப்படியாகிவிட்டானே என்று எண்ணுகையில், இந்த பாழாய்ப்போன அமெரிக்கன் செத்துத்தொலையக்கூடாதா என்று வேதனைப்படுகிறேன்".


பிரஸிடென்ட் ஜெயலலிதா : (ஆவேசத்துடன் ) "கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற 20G  அலைக்கற்றை விற்பனையில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ராசா 1 லட்சத்து 76 ஆயிரம் பில்லியன் டாலர் ஊழல் செய்திருக்கிறார். அமெரிக்காவே வெட்கி தலைகுனிய வைக்கும் இந்த மாபெரும் ஊழல் பற்றி கருணாநிதி நாட்டு மக்களுக்கு என்ன விளக்கம் சொல்ல போகிறார்"...?


கனெக்டர் கருணாநிதி : (திகிலுடன்) தாழ்த்தப்பட்ட ஆதி அமெரிக்க சமூகத்தில் பிறந்த இளவல் ராசா மீது உயர்குல ஏடுகள் இன ஆணவத்துடன் வக்கிரம் தோய்ந்த வார்த்தைகளை வீசி ஏசும் நிலையை காணும்போது  தந்தை ரூஸ்வெல்டும், பேரறிஞர் அண்ணன் கென்னடியும் வழிநடத்திட்ட சமூகநீதி போராட்டங்கள் இன்னும் நிறைவடையவில்லை என்பதை புரிந்துகொண்டு, அடிமைப்பட்டு கிடக்கும் அமெரிக்க இனம் வீறுகொண்டு எழுந்திட, பகைவர்களை அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்த பாலஸ்தீன பள்ளத்தாக்கிற்கே ஓட ஓட விரட்டியடித்திட, என் தலைமையிலும், இளவல் ஸ்டாலின் தலைமையிலும், அமெரிக்க இனமான புரபசர் தலைமையிலும் கோடிக்கணக்கான அமெரிக்க இனமக்கள் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் தேதியில் ஓஹ்லஹாமாவில் நடைபெறவிருக்கிற கழகத்தின் 10-ஆவது அகில அமெரிக்க சமூகநீதி மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் இன்றைய சூழ்நிலையில், அதற்கான ஏற்பாடுகளை முன்னின்று முடுக்கிவிடும் பணிகள் ஏராளமாய் என் கண்முன்னே காணப்படுவதாலும், நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்டு ஏற்ற மிகு எழுச்சியுரை ஆற்றவேண்டியிருப்பதாலும்,என்னுடைய இந்த விவாதத்தை இந்த மட்டிலே முடித்து....
" பகுத்தறிவு பகலவன் தந்தை ரூஸ்வெல்ட் வாழ்க"
" கான்ஸாஸ் தலைவன் பேரறிஞர் அண்ணன் கென்னடி வாழ்க"
" புரட்சி நடிகர் அருமை நண்பர் ரொனால்ட் ரீகன் வாழ்க"
" நடிகர் திலகம் அருமை நண்பர் மார்லன் பிராண்டோ வாழ்க"
"அச்சம் என்பது மடமையடா...அஞ்சாமை அமெரிக்கர் உடமையடா" என்பதற்கேற்ப வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது ஆங்கிலமாக இருக்கட்டும் என்று கூறி உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்"
                                                                                                                                                                                                                       ( கருணாநிதியும்,மற்ற திமுக செனட்டர்களும் "விட்டால் போதும்" என்று செனட்டிலிருந்து வெளியேறுகிறார்கள்.)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            முற்றும்.


கற்பனை : நல்ல பிசாசு (எ) புனித சாத்தான். 

பின்குறிப்பு :                               

இந்த பதிவில் இடம்பெறும் உரையாடல்கள் முற்றிலும் கற்பனையாகும். இது யார் மனதையாவது புண்படுத்தியிருக்குமானால் , புண்பட்ட இடத்தை நல்ல குளிர்ந்த நீரால் கழுவி ,அருகிலுள்ள மருத்துவமனைக்கு விரைந்து சென்று, நல்ல அழகான மலையாள நர்ஸாக தேடிப்பிடித்து ஊசி போட்டுக்கொள்ளவும்.

Saturday 22 November 2014

"பிசாசூஸ் காமிக்ஸ்"-PART -1
மை டியர் மானிடர்களே !!!

ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்ததால் இங்கே பதிவிட நேரம் கிடைக்கவில்லை("வெட்டியாத்தானே ஒக்காந்துருந்தே"). இடைப்பட்ட காலத்தில் அடியேனின் உடல்நலம் குறித்து கவலையுடன் விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இப்போது முழு உடல்நலம் திரும்பவில்லை எனினும் உற்சாகத்தோடு தேறிவருகிறேன்!


"காமிக்ஸ் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சே ஒரு பதிவு போடுங்களேன்"  என்று நேற்று காலை அமெரிக்க பிரதமர் ராஜபக்சே அடியேனிடம் தொலைப்பேசியில் கெஞ்சி கேட்டுக்கொண்டார். வேறுசில சர்வதேச பிரபலங்களும்(பவர் ஸ்டார் உள்ளிட்ட) வலியுறுத்தி கேட்டதால் இந்த புதிய பதிவு!இது அடியேனின் 25ஆண்டு கால காமிக்ஸ் சேகரிப்பின் ஒரு புகைப்பட தொகுப்பு. என்னிடமும் சில காமிக்ஸ்கள் இருக்கின்றன என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இவை. இந்த காமிக்ஸ்கள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் சூழ்ந்த ஒரு ரகசிய தீவில் உள்ள அறையின் பெட்டகத்தில், 24மணி நேரமும் A K ரக துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் புடைசூழ மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்பதை மட்டும் தெரிவித்து கொள்கிறேன்!

விரைவில் PART -2.

Saturday 2 August 2014

மிட்டாய் வாங்கலியோ மிட்டாய்...!!!


வாழ்க்கையில் நினைத்து நினைத்து மகிழும் அற்புத தருணங்கள் நம்மில் யாருக்கும் அடிக்கடி சித்திப்பதில்லை.அப்படியொரு உன்னத தருணத்தை லயன் மேக்னம் ஸ்பெசல் வெளியீட்டில் கலந்துகொண்ட நண்பர்கள் அனைவரும் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.அந்த தருணம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

மகத்தான அந்த விழாவின் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே அப்டேட் செய்துள்ளேன்.நேரமின்மையால் நண்பர்களின் பெயர்களை சேர்க்கவில்லை.நாளையும் புத்தக திருவிழாவில் எடிட்டர்ஜீ பங்கேற்பதால் நாளை மறுநாள் திங்கள் கிழமை முழுமையான ஒரு அப்டேட்டை இங்கே போடுகிறேன்.நன்றி நண்பர்களே!!!


எடிட்டர் :  என்னது...? இரும்புக்கை மாயாவி காமிக்ஸ் வேணுமா...? ஸாரி .ராங் நம்பர்.


சேலம் கார்த்திக் : "எங்கள் குடும்பம் காமிக்ஸ் குடும்பம்".


நண்பர்கள் ஈரோடு ஸ்டாலின்,மயிலாடுதுறை ராஜா,சேலம் டெக்ஸ் விஜயராகவன்.
எடிட்டருடன் அண்ணன் சேலம் கர்ணன்.


இந்த படை போதுமா...? இன்னும் கொஞ்சம் வேணுமா...?


ஜூனியர் டாம் க்ரூசுடன் சீனியர் டாம் க்ரூஸ் ( நண்பர் செந்தில் மாதேஷ் )


கிங் விஸ்வா :  இந்த வாரம் பூரா ரொம்ப பிஸி.நாளைக்கு அமெரிக்க பிரதமரோட ஒரு மீட்டிங்.ரெண்டு நாள் கழிச்சு இங்கிலாந்து ஜனாதிபதியோட பர்த்டே பார்ட்டி.அடுத்த வாரம் போப்பாண்டவரோட ஒரு பேட்டி.ஒரே குஷ்டமப்பா...ச்சீ...கஷ்டமப்பா.
பாரதி நந்தீஸ்வரன் :  நீங்க எப்பவுமே இப்படியா...இல்ல இப்படித்தான் எப்பவுமேவா...?


வாசகர் : விஜயன் ஸார்.இரும்புக்கை மாயாவி கதைங்களை மறுபடியும் போடுங்க.
எடிட்டர் :  ரொம்ப ஸாரி ஸார்.நான் விஜயன் இல்லை.அவரோட ஒண்ணுவிட்ட சித்தப்பாவோட தாத்தாவோட கொள்ளுப்பாட்டிக்கு மச்சினனோட எள்ளு பேரன்.


"உள்துறை அமைச்சருடன்" மனோரமா ரசிகர் மன்ற தலைவர் ஷல்லூம் ;-)
எடிட்டரிடம் புத்தகம் பெரும் நண்பர் நாகராஜன் சாந்தன்.(திருப்பூர் ப்ளூபெர்ரி).
எடிட்டரிடம் புத்தகம் பெரும் நண்பர் ஸ்டீல் க்ளா.(பொன்ராஜ்).


நண்பர்கள் வினோஜ்,அஹ்மெத் பாட்ஷா,பிரசன்னா.


நண்பர்கள் ஸ்டீல் க்ளா,கிங் விஸ்வா,ஆடிட்டர் ராஜா.


எடிட்டர் : ஏம்பா விக்ரம்.ரத்த படலம் ரீப்ரிண்ட மாசம் ஒண்ணுன்னு 18 மாசம் போடலாமா...? இல்ல மாசம் ரெண்டுன்னு 9 மாசம் போடலாமா...? இல்ல மாசம் மூணுன்னு 6 மாசம் போடலாமா...?இல்ல மாசம் நாலுன்னு 4 மாசம் போட்டு மிச்ச 2 கதைய அஞ்சாவது மாசம் போடலாமா...?இல்ல மாசம் அஞ்சுன்னு 3 மாசம் போட்டு மிச்ச 3 கதைய நாலாவது மாசம் போடலாமா...?இல்ல மாசம் ஆறுன்னு 3 மாசம் போடலாமா...?இல்ல மாசம் ஏழுன்னு 2 மாசம் போட்டு மிச்ச 4 கதைய மூணாவது மாசம் போடலாமா...?இல்ல மாசம் எட்டுன்னு 2 மாசம் போட்டு மிச்ச 2 கதைய மூணாவது மாசம் போடலாமா...?இல்ல மாசம் ஒம்பதுன்னு....
ஜூனியர் எடிட்டர் : அய்யய்யோ...எங்க அப்பாகிட்டேருந்து யாராவது என்னை காப்பாத்துங்களேன்...ஹெல்ப்...ஹெல்ப்... புத்தகவிழாவில் மாலையில் பங்கேற்ற நண்பர் திருப்பூர் சிபிசிபி அவர்களின் பிறந்தநாள் இன்று என்பதால் அவருடைய பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி நண்பர்கள் தூள் கிளப்பிவிட்டார்கள்.