அது 1982-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்.சரியாக
நினைவில்லை.முன்னேபின்னே இருக்கலாம்.மத்தியில் இந்திரா காந்தி தலைமையில் இந்திரா காங்கிரஸ்
ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம்.பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரச்னைகளாலும்
,காங்கிரஸ் கட்சிக்கே உரிய ஊழல் அரசியலாலும் நாடு பெரும் நெருக்கடிகளையும் சவால்களையும்
சந்தித்து கொண்டிருந்த போறாத காலம்.
அப்போது நான் நான்காம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன்.(இன்றுவரை
அதைத்தானே படித்திருக்கிறாய் என்று கேட்டுவிடாதீர்கள்) அடியேனுடைய ஊர் பள்ளிபாளையம்
என்றாலும் நான் படித்தது குமாரபாளையத்தில்.இந்நகரம் பள்ளிபாளையத்திலிருந்து 13கிலோ
மீட்டர் தொலைவில் உள்ளது.அங்கே பாட்டி வீட்டில் தங்கி படித்துகொண்டிருந்தேன்.
அன்றைய காலத்தில் அடியேனுக்கு அரசியல்
என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அறிவு கூட கிடையாது.
இந்திரா காந்தியை நேருவின் மகள் என்று
தெரியும்.அவர் பிரதமராக உள்ளார் என்பதும் தெரியும்.ஆனால் பிரதமர் என்றால் என்ன அர்த்தம்
என்று மட்டும் எனக்கு தெரியாது.
அப்படிப்பட்ட ஞானசூனியமான அடியேனுக்கு
ஒருநாள் ஒரு பெரும் அரசியல் தலைவரை நெருங்கிசென்று கைக்குலுக்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது.
இந்திரா காந்தியின் ஊழல் ஆட்சிக்கு எதிராக
அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஒரு மாபெரும் நடைபயணத்தை "கன்னியாகுமரியிலிருந்து
காஸ்மீர்"வரை தொடங்கி நடந்து வந்தார்.அன்றைய காலக்கட்டத்தில் தேசம் முழுவதும்
பெரும் செல்வாக்கு பெற்ற மக்கள் தலைவர் அவர்.நேர்மைக்கும்,கண்ணியத்திற்கும்
பேர்போன தலைவர்.அனைத்து தரப்பு மக்களின் அன்பை பெற்ற மாபெரும் தலைவர் அவர்!!!
நடைபயணத்தின் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம்
பவானி நகருக்கு அவர் வந்து சேர்ந்தார்.பவானிக்கும்,குமாரபாளையம் நகருக்கும் இடையே காவேரி
ஆற்று பாலம் உள்ளது.மிகவும் குறுகலான அந்த பாலம் வழியாகத்தான் அன்று போக்குவரத்து நடந்துகொண்டிருந்தது.அந்த
பாலத்திலிருந்து சற்று அருகில் என்னுடைய பாட்டி
வீடு இருந்ததால் அந்த தலைவரை நேரில் பார்க்க எனக்கு பெரிய சிரமம் ஒன்றும் ஏற்படவில்லை.
உச்சி வெயில் மண்டையை பிளக்கும் கடுங்கோடை
காலம்.அந்த தேசிய தலைவரை தரிசிக்க பவானி பாலத்தில் ஏராளமான கூட்டம் நிரம்பி வழிந்தது.சுண்டைக்காய்
பயலான நானும் எனது சக சுண்டைக்காய் நண்பர்களும் ஆளுக்கொரு குச்சி ஐஸ்க்ரீம் சகிதம்
அங்கே ஆஜராகியிருந்தோம்.அந்த தேசிய கட்சியின் உள்ளூர் தலைவர்களுள் ஒருவர் எனது உறவினர்
என்பதால் நான் அவர் அருகில் நின்றுகொண்டு தலைவர் எப்போது வருவார் என்று நிமிடத்திற்கு ஒருமுறை அவரை நச்சரித்து கொண்டிருந்தேன்.
சுமார் ஒரு மணிநேர காத்திருப்பிற்கு பிறகு
தலைவர் பவானியில் இருந்து புறப்பட்டுவிட்டார் என்ற தகவல் கிடைக்க கூட்டத்தில் பெரும்
பரபரப்பு ஏற்பட்டது.இந்திரா காந்தியின் ஜென்ம விரோதி என்று கருதப்பட்ட அந்த தலைவரை
பார்க்க கிட்டதட்ட அனைத்து கட்சிக்காரர்களும் அங்கே ஆஜராகிவிட்டார்கள்.பெரும் ஜனத்திரளிடையே
அந்த தலைவர் நடந்து வந்தார்.அவர் பார்வைக்கு கிடைத்ததும் மக்களின் உற்சாகம் பொங்கிவிட்டது.அந்த
தலைவரை வாழ்த்தி பெரும் குரலில் கோஷமிட்டார்கள்.அர்த்தம் புரியாவிட்டாலும் நானும் உற்சாகமாக
அந்த ஹிந்தி வாழ்த்தொலியை எழுப்பினேன்.தலைவர் அருகில் வரவர கூட்டத்தின் தள்ளுமுள்ளில்
மாட்டிகொண்ட நான் அங்கேயும் இங்கேயுமாக இழுக்கப்பட என்னே அதிர்ஷ்டம் பாருங்கள்.சரியாக
அந்த தலைவரின் அருகிலேயே நான் வந்துவிட்டேன்.அந்த தலைவர் என்னை பார்த்துவிட்டார்.என்னை
பார்த்து ஏதோ சொன்னபடி அவர் கையை நீட்ட முழுக்கை சட்டை அணிந்திருந்த அவரது கையை பிடித்து
நான் குலுக்கினேன்.அவரது பெயரை தவிர வேறெதுவும் அடியேனுக்கு தெரியாது.ஆனால் அவர் மாபெரும்
ஒரு தேசிய தலைவர் என்று பின்னாளில் அறிந்து கொண்டேன்.அவருடைய கட்சி மீதும் எனக்கு பெரும்
மரியாதையை பின்னாளில் வளர்த்துக்கொண்டேன்.
1980களில் அடியேனால் கைக்குலுக்கப்பட்ட
அந்த தலைவர் பின்னாளில் இந்தியாவின் பிரதமராக சிறிது காலம் பதவிவகித்தார்.சாத்தானின்
மகிமை வாய்ந்த கைகளால் அந்த பதவி அவருக்கு கிடைத்ததா என்று அடியேனுக்கு தெரியாது.ஆனால்,இந்த
பதிவை இடும் இன்றைய தினம் ம.தி.மு.க.பொது செயலாளர் திரு.வைகோ அவர்களை குமாரபாளையம்
அருகிலுள்ள குப்பாண்டபாளையம் என்ற கிராமத்தில் வைத்து அவரது கையை குலுக்கினேன்.
பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி திரு.வைகோ
நடைபயணம் மேற்கொள்கிறார்.ஒரு அவசர வேலையாக குமாரபாளையம் சென்றபோது எதிரில் அவருடைய
ஊர்வலம் வந்து கொண்டிருந்தது.ஓய்விற்காக திரு.வைகோ ஓரிடத்தில் அமர்ந்தபோது பலரும் அவரது
கையை பிடித்து குலுக்க,அடியேனும் சந்தடிசாக்கில் அவரது கையைபிடித்து குலுக்கினேன்.
அடியேனின் கை அதிர்ஷ்டக்கார கையா என்பது
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் முடிவை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அதெல்லாம் சரி....உன்னால் பிரதமர் ஆக்கப்பட்ட
(!)அந்த அதிர்ஷ்டசாலி தேசிய தலைவர் யார் என்று கேட்கிறீர்களா.....?
அவர் முன்னாள் "இளம் துருக்கியர்"
முன்னாள் பிரதமர்.ராஜா சந்திரசேகர் சிங்!!!