Saturday, 6 April 2013

ஒரு ஒப்பந்தத்தின் கதை!!ஒரு கழுதையின் கதை!!!

ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஏற்பட்ட கதை!



                                               இந்திய பிரதமர்  ராஜீவ் காந்தி 



                           
                 இலங்கை அதிபர் ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனா          
                                 



இந்தியா-இலங்கை ஒப்பந்தம் உருவாகி இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ,அதை நினைவுகூரும் நோஸ்டால்ஜியா பதிவு இது!!!

ராஜீவ் காந்தி அவர் வாழ்நாளில் செய்த ஒரே ஒரு உருப்படியான நல்ல காரியம் இந்த ஒப்பந்தமே என்பது அடியேனின் தாழ்மையான கருத்து!!!இலங்கையின் அதிபரும்,பழம்பெருச்சாளியுமான J.R.ஜெயவர்த்தனா -வை பணியவைக்க அவர் மேற்கொண்ட பூமாலை நடவடிக்கை ,கட்சி பேதமில்லாமல் அனைவரின் ஆதரவையும் பெற்றது.இதன் விளைவாகவே இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள ஜெயவர்த்தனா முன்வந்தார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண, அன்றைய தமிழக முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருடன் இணைந்து, சமரச முயற்சியில் ராஜீவ் ஈடுபட்டார். இதன் விளைவாக ஒரு சமரசத்திட்டம் உருவாயிற்று. இலங்கைத் தலைநகரான கொழும்பில் 29-7-1987-ல் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. இதில் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜூனியஸ் ரிச்சர்ட்  ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு, எம்.ஜி.ஆரை ராஜீவ் காந்தி அழைத்தார். ஆனால், எம்.ஜி.ஆர். இலங்கை செல்ல இயலாமல் இருந்ததால், தன் சார்பில் அமைச்சர் பண்ருட்டிராமச்சந்திரனை அனுப்பி வைத்தார். இந்த ஒப்பந்தத்தை இலங்கை பிரதமர் பிரேமதாசா, பாதுகாப்பு மந்திரி லலித் அதுலத் முதலி (இந்த "புண்ணியவான்கள்"இருவரும் ஒப்பந்தத்தை முறியடிக்க விடுதலை புலிகளோடு ரகசிய கூட்டு வைத்துக்கொண்டதும்,பிறகு அவர்களால் படுகொலை செய்யப்பட்டதும் பிற்கால வரலாறு!) ஆகிய இருவரும் ஏற்கவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

(1) ஒப்பந்தம் கையெழுத்தான 48 மணி நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும். ராணுவத் தினரும், விடுதலைப்புலிகளும் போரை நிறுத்த வேண்டும்.

(2) மூன்று நாட்களுக்குள் ராணுவத்தினர் அவர்களுடைய முகாமுக்குத் திரும்பிவிட வேண்டும். விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.

(3) இலங்கையில் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படும். ஆயுதங்களை ஒப்படைத்த விடுதலைப்புலிகள் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்று, மற்ற குடிமக்களோடு சேர்ந்து வாழ அனுமதிக்கப்படுவார்கள்.

(4) தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, ஒரே மாநிலமாக ("தமிழ் மாநிலம்") அமைக்கப்படும். இந்த மாநில சட்டசபைக்கு 3 மாதத்தில் தேர்தல் நடத்தப்படும். ஒருவேளை தாமதம் ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன் நடைபெறும். தேர்தல் நடைபெறும்போது, அதை மேற்பார்வையிட இந்தியாவில் இருந்து பார்வையாளர்கள் வருவார்கள்.

(5) இந்த மாநிலத்துக்கு முதல்- அமைச்சர் இருப்பார். அவரை பொதுமக்கள் தேர்ந்து எடுப்பார்கள். கவர்னரை ஜனாதிபதி நியமிப்பார். "வடக்கு பகுதியுடன் நிரந்தரமாக இணைந்திருக்க விருப்பமா?" என்று, 1988-ம் ஆண்டு கடைசிக்குள் கிழக்குப் பகுதியில் பொது ஜன வாக்கெடுப்பு நடத்தப்படும். கலவரம் காரணமாக இலங்கையில் கிழக்குப் பகுதியில் இருந்து வெளியேறிய 1,30,000 தமிழ் அகதிகள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வந்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளலாம்.

(6) இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கும், சுதந்திரத்துக்கும் ஆபத்து உண்டாக்கக்கூடிய எந்த நடவடிக்கைகளும், இந்திய மண்ணில் நடக்காதபடி இந்திய அரசாங்கம் பார்த்துக் கொள்ளும்.

(7) இந்தியாவுக்கும், இலங்கைக்கும் மத்தியில் உள்ள கடல் பகுதியில் விடுதலைப்புலிகள் போர் நடவடிக்கையில் ஈடுபடாதபடி இந்திய கப்பல் படைகளும், கடலோர பாதுகாப்பு படையினரும் கவனித்துக் கொள்வார்கள்.

(8) இந்த ஒப்பந்தத்துக்கு இலங்கை பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படும். இதற்காக பாராளுமன்றம் கூட்டப்படும்.

(9) ஒப்பந்தத்தின் அம்சங்களை நிறைவேற்றுவதில் இந்திய ராணுவ உதவியை இலங்கை அரசாங்கம் நாடினால் அதற்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்.

(10) இந்தியா வந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திரும்பி அனுப்பும் பணியை, இந்தியா துரிதப்படுத்தும்.

இவ்வாறு ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருந்தது.

ஒப்பந்தத்தை முதலில் ஆதரித்த விடுதலை புலிகள் பிறகு தங்கள் நிலைப்பாட்டை மாற்றி எதிர்க்க ஆரம்பித்ததும்,ஒப்பந்த ஆதரவாளர்களை கொன்று குவித்ததும் ,அதன் தொடர்ச்சியாக ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதும் நாமனைவரும் அறிந்ததே!!!

இந்த ஒப்பந்தம் மட்டும் அன்று முறையாக அமல்படுத்தபட்டிருந்தால் இன்று தமிழீழ மக்கள் அனுபவிக்கும் கொடுந்துயரம் ஏற்பட்டிருக்காது.சிங்களர்களுக்கு சமமான ஒரு அதிகாரத்தை தமிழர்கள் இந்தியாவின் உதவியுடன் பெற்றிருப்பார்கள்.

ஆனால் நடந்ததோ நேர்மாறாக.ஒரு மேற்கத்திய அறிஞர் (பிரெட்ரிக் எங்கெல்ஸ்?)கூறியது இது;  "வரலாறு என்பது மற்ற எல்லா தேவதைகளையும் விட கொடூரமானது"(HISTORY IS A MOST CRUEL OF ALL GODDESSES).
ஈழத்தமிழனின் வரலாறு மற்ற எல்லா தேவதைகளையும் விட கொடூரமானது!!!


அதுசரி.அதென்ன கழுதையின் கதை என்கிறீர்களா.....?இதோ படியுங்கள்.

ஒரு சலவைத் தொழிலாளியிடம் கழுதை ஒன்று இருந்தது. அந்தக் கழுதைக்கு தேவையான தீவனத்தை வைக்க முடியவில்லை. வயிறார புல் மேய்வதற்கு மேய்ச்சல் நிலமும் இல்லை.

இந்தக் காரணத்தால் கழுதை நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே வந்தது. சலவைத் தொழிலாளி கழுதையின் நிலை கண்டு மிகவும் கவலைப்பட்டான்.

ஒருநாள் சலவைத் தொழிலாளி காட்டு வழியாக நடந்து வந்துக் கொண்டிருந்தபோது ஒரு புலி செத்துக் கிடப்பதை  கண்டான்.

அதைக் கண்டதும் சலவைத் தொழிலாளிக்கு ஒரு யோசனை தேன்றியது.

இந்தப் புலியின் தோலை உரித்து அதைக் கழுதை மீது போர்த்தி  நெல் வயல்களில் விட்டு மேயச் செய்தால் உண்மையாகவே புலி மேய்வதாக எண்ணிப் பயந்து கொண்டு வயலுக்குச் சொந்தக்காரர்கள் பேசாமலிருந்து விடுவார்கள். கழுதை வயிறார மேயும் என்று சலவைத் தொழிலாளி நினைத்து கொண்டான்.

புலித் தோலை உரித்து எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போனான்.

மறுநாள் கழுதை மீது புலித் தோலைப் போர்த்தி விளைந்திருந்த வயல்கள் பக்கமாக போகச் செய்தான்.

புலிதான் பயிரை மேய்கிறது என்று எண்ணிக் கொண்டு குடியானவர்கள் அதை விரட்டப் பயந்து கொண்டு பேசாமலிருந்து விட்டார்கள்.

கழுதை விளை நிலத்தில் அன்றாடம் வயிறார மேய்ந்து நன்றாக கொழுத்துவிட்டது.

ஒரு நாள் கழுதை புலித் தோலைப் போர்த்திக் கொண்டு நெல் வயலில் மேய்ந்துக் கொண்டிருந்தது.

அப்போது அந்தப் பக்கமாக வந்த ஒரு பெண் கழுதை உரத்த குரல் எடுத்து கத்தத் தொடங்கியது.

அதைக்கேட்ட புலித்தோல் போர்த்திய ஆண் கழுதை பெண் கழுதையின் குரலைக் கேட்டதும் உற்சாகமடைந்து தானும் உரத்த குரல் எடுத்து கத்தத் தொடங்கிவிட்டது.

குடியானவர்களுக்கு உண்மை விளங்கிவிட்டது. எல்லோரும் ஒன்று சேர்ந்து தடிகளை எடுத்துக் கொண்டு வந்து கழுதையை அடித்து கொன்றார்கள்.

நீதி: "புலித்தோல் போர்த்திய கழுதைகளை நம்பி மோசம் போகாதீர்!!!"



20 comments:

  1. நண்பர் புனித சாத்தான் அவர்களே.......


    போபர்ஸ் ஊழலால் நாறிப்போன தன் இமேஜை மீட்டுக்கொள்ளும் நோக்கோடுதான் ராஜீவ் இலங்கை பிரச்சினையில் கால்வைத்தார்......இந்திரா , எம்ஜிஆர் போல் முட்டாள்தனமாக செயல்படாமல் இலங்கைப்பிரச்சினையை தெளிவான நோக்கோடு அணுகினார்...... மனதார தமிழர்களுக்கு நல்லது செய்யவேண்டுமென்று நினைத்தார்.....இலங்கைப்பிரச்சினை தொட‌ங்கிய காலம் முதல் இன்றுவரை , தமிழகளுக்கு நன்மை அளிக்கும்விதமாக செய்யப்பட ஒரே முயற்சி ராஜீவ் - ஜெயவர்தனே ஒப்பந்தம்தான்.....அந்த நல்ல முயற்சியை கெடுத்து நாசம் செய்தவர் பிரபாகரன்......இன்று அதே பிராபாகரனின் படத்தை கைகளில் ஏந்திக்கொண்டு போராடும் அறிவுக்கொழுந்துகளை நினைத்தால் பாவமாக இருக்கிறது.......

    ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்வரை தெளிவாக செயல்பட்ட ராஜீவ்,அதன்பிறகு சொதப்பினார்.....தேவையில்லாமல் தமிழக அரசியல்வாதிகளின் பேச்சைக்கேட்டுக்கொண்டு நமது ராணுவத்தின் கைகளை கட்டிப்போட்டார்......புலிகளின் கெரில்ல தாக்குதலுக்கு நூற்றுக்கணக்கான நம் ராணுவ வீரர்களை பலி கொடுத்தார்......ஆறுமுறை இந்திய ராணுவத்திடம் சிக்கிய பிரபாகரனை கொல்லவேண்டாமென்று உத்தரவிட்டார்...... அந்தத்தவறால் தனது உயிரையும் இழந்தார்.........

    ReplyDelete
  2. எது எப்படியோ, இலங்கை வந்த இந்திய 'அமைதிப்படை' புலிகளோடு மோதி வெல்லமுடியாமல் அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததை கண்முன் கண்டு வளர்ந்த சாட்சிகளில் நானும் ஒருவன். எங்கள் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்த கொடுமையும், சாதாரண ஆண்களைப் பிடித்துச் சென்று சித்திரவதை செய்ததும் இன்றும் கண்முன் நிழலாடும் நிஜங்கள்.

    எந்தவொரு ஒப்பந்தமும் சிங்களவர்களின் மனநிலையில் மாற்றம் கொண்டுவரப்போவதில்லை. புலிகளின் அழிவுக்குப்பின்னர் சாதாரண சிங்கள மக்களின் மனங்களில் தமிழர்கள்பால் சிறிய இரக்கம் தோன்றியது. அதை எப்படி இல்லாமற் செய்வது என்று தலையைச் சொறிந்துகொண்டிருந்த சிங்கள இனவாத அரசியல்வாதிகளுக்கு இப்போது தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களும், அமெரிக்கா கொண்டுவந்த ஒப்புக்குச் சப்பாணி தீர்மானமும் தடியெடுத்துக்கொடுத்து அடி என்பதாக வாய்ப்பை ஏற்படுத்திவிட்டது. எப்போதும் அடிவாங்கிச் சாகப்போவது அப்பாவித் தமிழ் மக்கள்தான்.

    ReplyDelete
    Replies
    1. டியர் பொடியன்!!!

      ஈழ தமிழர்களின் துயரங்களுக்கு மற்றவர்கள்மேல் பழி சுமத்துவதில் நியாயமில்லை.வறட்டு பிடிவாதத்தையும்,பிரிவினை கோரிக்கையையும் கைவிட்டு மிதவாத ஜனநாயக அரசியல் அமைப்புகளை உருவாக்கி ,இந்தியாவின் ஆதரவோடு "ஒரு சமஷ்டி தனி மாநிலமாக "ஈழம் விளங்குவதே இன்றைய உலக அரசியல் சூழலில் உகந்த முடிவாக இருக்கும்.
      அதை விடுத்து பிரிவினைதான் ஒரே தீர்வு என்று செயல்படுவது ஈழ மக்களுக்கு பேராபத்தில் முடியும்.கடைசி சிங்களன் உயிரோடு இருக்கும்வரை "தனி ஈழம்"சாத்தியமில்லை.எந்த உலக நாடும் இலங்கை பிளவு படுவதை விரும்பாது என்பதை கவனத்தில் கொண்டு ஒரு புதிய ஜனநாயக அரசியல் சூழலை உருவாக்கி கொள்ள முயலுங்கள்.சிங்கள துவேசத்தையும்,பிரிவினைவாதத்தையும் கைவிடுங்கள்.ஒட்டுமொத்த உலகமும் உங்களை ஆதரிக்கும்.

      Delete
    2. இங்கே பொறுப்பதிகாரியாக இருந்த கேணல் ஹரிகரனே ஒப்புக்கொண்டிருக்கிறார். அமைதிப்படையில் இலங்கை வந்த தமிழக அதிகாரிகள் இருந்தால் கேட்டுப்பாருங்கள் அவர்கள் உண்மை சொல்வார்கள். தங்கள் தமிழ் உறவுகளுக்கு நடந்த அநியாயங்களைக் கண்டும் ஏதும் செய்யவியலாமல் மௌனமாய் அழுத தமிழக இராணுவவீரர்கள் சிலரை என் சிறுவயதுப் பராயத்தில் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் சொல்வார்கள் எம்மக்கள் துயரை. உங்கள் தேசத்து இராணுவத்தின்மீது வீண் பழிபோடுவதோ, புலிகளை புகழ்வதோ இன்று இங்கு மிஞ்சியிருக்கும் தமிழர்களின் எண்ணமல்ல. எங்களுடைய அடுத்த தலைமுறைகளாவது யுத்தப் பிணியின்றி நிம்மதியாய் வாழட்டும்.

      இறுதிப்போர் முடிந்த பின்னர் தமிழர்களின்மீது சிங்களவருக்கே இரக்கம் இருந்தது. ஆனால், இன்று தமிழகத்தில் தோன்றியிருக்கும், அல்லது தூண்டப்பட்டிருக்கும் போராட்டமானது மீண்டும் சிங்கள இனவெறியை கிளறிவிட்டிருக்கிறது. நாளை மீண்டும் இங்கிருக்கும் தமிழர்மீது சிங்கள இனவெறியர்கள் தங்கள் கொடூரங்களை அரங்கேற்றத்தான் போகிறார்கள். செய்த 'உதவிகள்' அனைத்தும்போதும். எங்களை இனியாவது நிம்மதியாக இருக்க விடுங்கள் என்றுதான் கேட்கிறோம். அனைவரிடமும்.

      Delete
    3. //எந்த உலக நாடும் இலங்கை பிளவு படுவதை விரும்பாது என்பதை கவனத்தில் கொண்டு ஒரு புதிய ஜனநாயக அரசியல் சூழலை உருவாக்கி கொள்ள முயலுங்கள்.சிங்கள துவேசத்தையும்,பிரிவினைவாதத்தையும் கைவிடுங்கள்.ஒட்டுமொத்த உலகமும் உங்களை ஆதரிக்கும்.//

      இன்று பிரிவினை கேட்கும் நிலையில் நாமில்லை. அன்றாட வாழ்வுக்கே வழியில்லாமல்தான் இன்றைய யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்து தமிழ் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒருவாய் உணவு கொடுக்க முயல்வார்களா, பிரிவினைவாதம் பேசுவார்களா? இன்று பிரிவினையை தூக்கிப்பிடிப்பவர்கள் 'புலம்பெயர்ந்து' வெளிடுநாடுகளில் இருப்போரும், இப்போது தமிழகத்தில் திடீர் 'எழுச்சி!!!!' பெற்றிருப்போரும்தான். தயவுசெய்து உங்கள் நாட்டவரிடம் சொல்லுங்கள். எங்களை நிம்மதியாக இருக்கவிடுமாறு.

      Delete
  3. பொடியன் அவர்களே........

    இந்திய அமைதிப்படை குறித்து தாங்கள் செய்ததெல்லாம் வெறும் அவதூறுப்பிரச்சாரம் என்று அண்டன் பாலசிங்கம் ஒப்புக்கொண்டார்.......உங்களைப்போன்றவர்கள் இது போன்ற அவதூறுகளை இன்னும் பரப்பி வருகிறீர்கள்.......

    ஒன்றை மட்டும் நன்கு அறிந்துகொள்ளுங்கள்...........உண்மையில் இந்த உலகில் இலங்கைவாழ் தமிழர்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய நினைத்தால் அதை இந்தியா மட்டுமே செய்யமுடியும்......

    பிரபாகரன் படத்தை கையில் ஏந்திக்கொண்டு போராடுவதும் , இந்திய ராணுவத்தை இழிவுபடுத்துவதும் ,இலங்கைத்தமிழர்களை மேலும் துன்பத்துக்கு ஆளாக்கும்........பிறகு உங்கள் இஷ்டம்......

    ReplyDelete
    Replies
    1. //உலகில் இலங்கைவாழ் தமிழர்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய நினைத்தால் அதை இந்தியா மட்டுமே செய்யமுடியும்......//

      'செய்ததெல்லாம்' போதும். எங்கள் பாட்டில் எங்களை இருக்கவிடுங்கள். அதுபோதும்.

      Delete
    2. /பிரபாகரன் படத்தை கையில் ஏந்திக்கொண்டு போராடுவதும் , இந்திய ராணுவத்தை இழிவுபடுத்துவதும் ,இலங்கைத்தமிழர்களை மேலும் துன்பத்துக்கு ஆளாக்கும்........பிறகு உங்கள் இஷ்டம்......//

      அதைச் செய்பவர்கள் உங்கள் நாட்டவர்தான். இங்கே நாங்கள் எங்கள் அன்றாட வாழ்வுக்காகத்தான் வாழ்க்கையோடு போராடுகிறோம். முதலில் அதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் நாட்டவருக்கு ஏன் இந்த திடீர் எழுச்சி?????

      Delete
    3. //எங்கள் பாட்டில் எங்களை இருக்கவிடுங்கள். அதுபோதும்.//

      கடந்த ஒருமாதமாக எல்லா வலைதளங்களிலும் நான் இந்த கருத்தைத்தான் எழுதிவருகிறேன்.......

      எம்ஜியார் , இந்திரா முதல் ராஜீவ் வரை இந்தியா தலையிட்டதால் வந்த குழப்பங்கள் போதும்....இனியேனும் அவர்கள் பிரச்சினையை அவர்களே பார்த்துக்கொள்ளட்டும்..... இந்தியா தலையிடுவ‌தால் அவர்களுக்கு இடையூறுகள் தான் அதிகம் என்று......

      Delete
  4. அப்படி ஒரு நினைப்பா உங்களுக்கு?

    ReplyDelete
  5. //இலங்கை வந்த இந்திய 'அமைதிப்படை' புலிகளோடு மோதி வெல்லமுடியாமல் அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததை //

    அப்படி ஒரு நினைப்பா உங்களுக்கு?


    இந்திய ராணுவம் வன்னிக்காட்டை விட அடர்த்தியான வடகிழக்கு மாநிலங்களில், தீவிராவாதிகளோடு பல வருடங்களாக போராடிவருகிறது ..........புலிகளை ஒழிக்க வேண்டும் என்று இந்தியா ராணுவம் நினைத்திருந்தால் ஒரே நாளில் புலிகளை ஒழித்திருக்க முடியும்.......இந்தியாவில் இருந்துவ‌ந்த , தவறான வழி ந‌டத்தல்களால் ,இந்திய ராணுவம் கிட்டதட்ட கையைக்கட்டிக்கொண்டு போராடியது...... ஆறுமுறை உயிருடன் பிடிபட்ட பிரபாகரனை தப்பிக்க விட்டது [ தமிழக அரசியல்வாதிகளின் மிரட்டல் காரணமாக ] ........


    இந்திய ராணுவத்தின்மீது கெரில்ல தாக்குதல் நடத்துவதும் , ராணுவம் திருப்பி தாக்கினால் தப்பி ஓடி பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் ஒளிந்துகொள்வதும் , புலிகளின் வழக்கம்........பொதுமக்களை தாக்க எந்த ராணுவமும் த்யங்கும்.....

    பல முறை இதுபோல் நடந்ததால் , கடைசிமுறை ஏமாற ராஜபக்சே தயாராக இல்லை....பொதுமக்கள் செத்தாலும் பரவாயில்லை .,புலிகள் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்........எனவே ,என்றுமே இலங்கைமக்களின் துயரத்துக்கு முழுமுதல் காரணம் புலிகளே......

    ReplyDelete
  6. இதை வாசியுங்கள். வீடியோக்களைப் பாருங்கள்: இந்தியர்களே எழுதியவை இவை:

    http://www.yarl.com/forum3/index.php?showtopic=104669

    ReplyDelete
    Replies
    1. பொடியன் அவர்களே.....

      இந்தியாவில் பிற‌ந்துவிட்டு இந்தியாவுக்கே துரோகம் செய்யும் தேசதுரோகிகளுக்கா எங்கள் நாட்டில் பஞ்சம்? இந்த உடன்பிறந்தே கொல்லும் வியாதிகள் எங்களுக்கு புதியவர்கள் அல்ல......

      சொல்லப்போனால் தேசத்துக்கு எதிராக பேசுபவர்கள்தான் எங்கள் நாட்டில் அறிவுஜீவிகளாக மதிக்கப்படுகிறார்கள்....[அந்தோனிசாமி மார்கஸ் , அருந்ததி ராய் போன்ற குருவி மண்டைகள்.........]

      இவர்களிடமெல்லாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

      Delete
    2. டியர் பொடியன்!!!
      புதிய ஜனநாயகம் என்ற நக்ஸல் பத்திரிக்கையின் கட்டுரை (அல்லது கட்டுக்கதை)முற்றிலும் தவறானது.நக்ஸல் வெறியர்கள் அக்ஷரசுத்தமான இந்திய விரோதிகள்.தனி ஈழம் பற்றி பேச அந்த அயோக்கிய சிகாமணிகளுக்கு எந்த அருகதையும் கிடையாது.தேசிய இனங்களின் சுய நிர்ணயத்தை பேசும் இந்த கும்பல் ,முதலில் மா சே துங்கால் ஆக்கிரமிக்கப்பட்ட திபெத்தின் "சுய நிர்ணய "உரிமையை பற்றி பேசட்டும்.

      Delete
  7. http://www.shobasakthi.com/shobasakthi/?p=1006

    ReplyDelete
  8. Please read this:

    http://truetamilans.blogspot.com/2008/11/2.html

    ReplyDelete
  9. புனிதசாத்தான் அவர்களே.......

    தமிழ்ஹிந்து தள‌த்தில் பூவண்ணன் என்ற நபருக்கு நீங்கள் இட்ட பதிலை ரசித்தேன்.......பகுத்தறிவு முக மூடி போட்டுக்கொண்டு கிறித்தவ பிரச்சாரம் செய்யும் மேற்படி நபரோடு பல இணைய தளங்களில் வாதம்செய்து வருகிறேன்......பதில் சொல்லமுடியாதபடி மடக்கிவிட்டால், விவாதத்தை திசைதிருப்புவதில்மேற்படி நபர் கில்லாடி.....இவர்கள் உளறுவதையெல்லாம் ஹிந்துக்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதால்தான் நாம் இன்று இந்த நிலையில் இருக்கிறோம்......அப்போதைக்கப்போதே பதிலடி தரவேண்டும்........சான்றோன்

    ReplyDelete
    Replies
    1. டியர் சிவ.சரவணகுமார்!!!

      இந்த விஷயத்தில் உங்கள் கருத்துக்கு அடியேன் மாறுபடுகிறேன்.நாம் என்ன பதிலடி கொடுத்தாலும் "முன்முடிவு"டன் அலையும் சில சைக்கோ ஆசாமிகள் அதை ஒரு பொருட்டாகவே கருதமாட்டார்கள்.இம்மாதிரி ஜென்மங்களுடன் "மாரடித்தே"டோண்டு அவர்கள் காலத்தை விரயம் செய்துவிட்டார்.என்னைபொருத்தவரை எதிராளி எந்த ஆயுதத்தை எடுக்கிறானோ ,அதே ஆயுதத்தை தான் நாமும் பயன்படுத்தவேண்டும் என கருதுகிறேன்.எதிராளி மூர்க்கமான அவதூறுகளை திட்டமிட்டு முன்வைக்கும்போது அதற்க்கு பதில் சொல்லி லாவணி பாடுவதை தவிர்த்து அவன் பாணியிலேயே நாமும் அவதூறுகளை தொடுத்தால் மட்டுமே அவனுடைய அவதூறுகளை நிறுத்தமுடியும்.அதற்க்கு மாறாக எதிராளி சொல்வது அவதூறு என்று அவனுக்கே நாம் விளக்கம் கொடுத்துகொண்டிருப்பது நமது நேரத்தை விரயமாக்கும் செயல்!!!

      Delete
  10. நமது காமிக்ஸ் நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும்

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))
    .

    ReplyDelete
  11. உங்களுக்கு ஒரு e-மெயில் அனுப்பியுள்ளேன் - பார்க்கவும் !

    ராகவன்

    ReplyDelete