ஒரு வழியாக கர்னாடக சட்டசபை தேர்தல் முடிவுகள்
வெளியாகி பா.ஜ.கட்சிக்கு பெரும் தோல்வியும்,காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பாரா வெற்றியும்
கொடுத்துள்ளது.தேர்தல் முடிவுகள் இப்படித்தான் அமையும் என அனைவரும் ஓரளவு யூகித்திருந்தாலும்
இந்த முடிவுகள் பா.ஜ.கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்ப்படுத்தியுள்ளதற்க்கு காரணமான
முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிற்கு ஒரு வெற்றியாகவே கருதப்படுகிறது.
கர்நாடகாவில் பா.ஜ.கட்சி ஆட்சியில் அமர
காரணமாக விளங்கியவர் எடியூரப்பா.அவரது தலைமையில் அந்த கட்சி கர்நாடகாவில் வெற்றிகளை
குவித்தது.இது கட்சியில் இருந்த அவரது எதிர்ப்பாளர்களுக்கு (குறிப்பாக; அனந்த குமார்)அவர்
மீது பொறாமையையும்,வெறுப்பையும் தூண்டியது.சுரங்க ஊழல் விவகாரம் வெளியானபோது இவர்கள்
தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி எடியூரப்பாவை பதவி விலக வைத்து ,கட்சியிலிருந்து அவரை
ஓரங்கட்ட செய்தனர்.பலமுறை இவர்களை பற்றி கட்சி மேலிடத்தில் புகார் அளித்து பார்த்தார்
எடியூரப்பா.பலன் ஏதுமில்லை.விளைவு ,கட்சியில் இருந்து வெளியேறி கர்னாடக ஜனதா என்ற புது
கட்சி தொடங்கி தனியாக போட்டியிட்டு ,வாக்குகளை பிளந்து காங்கிரஸின் வெற்றிக்கு வழிவகுத்துவிட்டார்.கோஷ்டி
அரசியலில் காங்கிரஸுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று பா.ஜ.க.வினர் நாட்டு மக்களுக்கு
இதன் மூலம் செய்தி தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸை பொறுத்தவரை இது அவர்களின் சொந்த
வெற்றியல்ல.இது எடியூரப்பா அவர்களுக்கு கொடுத்த தட்சிணை.மாநிலத்தின் மிக பெரிய வாக்கு
வங்கியான லிங்காயத் (வீர சைவர்)வாக்குகளை எடியூரப்பா பிளந்ததால்,பா.ஜ.கட்சி பரிதாபமாக
மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. பதவியில் அமரும் புதிய முதல்வர் சித்தராமய்யா நன்றி கடனாக எடியூரப்பா
மீதான ஊழல் வழக்குகளை நீர்த்து போகவைத்து அவரை காப்பாற்றி விடுவார் என எதிர்பார்க்கலாம்.
இந்த கூத்துக்களை பார்க்கும்போது அடியேனுக்கு
டெல்லியில் பா.ஜ.கட்சி செய்த அதே கோமாளித்தனங்களை கர்நாடகாவிலும் அரங்கேற்றியதால் நேர்ந்த
விளைவோ என தோன்றியது.டெல்லி மாநிலத்தில் 1993ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க.பெரும்
வெற்றி பெற்று திரு.மதன்லால் குரானா தலைமையில் ஆட்சியமைத்தது.இரண்டாண்டுகளுக்கு பிறகு
அவரை நீக்கிவிட்டு திரு.சாஹிப் சிங் வர்மாவை முதல்வராக்கியது.பிறகு இரண்டாண்டுகள் கழித்து
அவரையும் நீக்கிவிட்டு திருமதி.சுஷ்மா ஸ்வராஜை முதல்வராக நியமித்தது.அவர் மூன்ற மாதம்
மட்டுமே முதல்வர் பதவி வகித்தார்.பிறகு வந்த தேர்தலில் பா.ஜ.க.வை மக்கள் தோற்கடித்தனர்.தொடர்ந்தால்போல்
மூன்று தேர்தல்களில் அந்த கட்சியை மக்கள் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.மதன்லால்
குரானாவை நீக்கியதால் அவரது "அரோரா"சமூக வாக்குகளை இழந்தனர்.சாஹிப் சிங்
வர்மாவை நீக்கியதால் அவரது "ஜாட்"சமூக வாக்குகளையும் பா.ஜ. க.வினர் இழந்தனர்.இதே
கோமாளித்தனங்களை தான் கர்நாடகாவிலும் பா.ஜ.க.தலைவர்கள் செய்தனர்.
எடியூரப்பாவை நீக்கியதால் "லிங்காயத்"வாக்கு
வங்கி பாதிக்கப்பட்டது.பிறகு முதல்வரான சதானந்த கௌடாவை தொடர்ந்து ஆள விடாமல்,அவரையும் நீக்கி ஜெகதீஸ் ஷெட்டர் அவர்களை
முதல்வராக்கினார்.இதனால் "ஒக்கலிகா"வாக்குகளையும் இப்போது இழந்துள்ளனர்.டெல்லியில்
செய்த அதே தவறை கொஞ்சமும் புத்திசாலித்தனமில்லாமல் இங்கே கர்நாடகாவிலும் பா.ஜ.க.தலைவர்கள்
செய்துள்ளதை பார்க்கும்போது தவறு செய்வதில் சற்றும் பாரபட்சமில்லாமல் நடந்து
கொள்ளும் அவர்களின் நேர்மையை பாராட்ட தோன்றுகிறது.நல்லவேளை,குஜராத் கலவரத்திற்கு
பொறுப்பேற்று நரேந்திர மோதி பதவி விலகவேண்டும் என்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கோரிக்கையை
பா.ஜ.க.புறக்கணித்தது.இல்லையென்றால் டெல்லியை போல் குஜராத்தும் பா.ஜ.க."கோட்டை"விட்ட
மாநிலமாக மாறியிருக்கும்.
நரேந்திர மோதி பதவி விலகவில்லை.குஜராத்
பிழைத்தது!!!
வெல்கம் பேக் மை டியர் புனித சாத்தான்,
ReplyDeleteநேற்றில் இருந்தே உங்களிடமிருந்த பதிவை எதிர்பார்த்துகாத்திருந்தேன்.
வோட்டுக்களை பிரிப்பது சமீப காலமாக (கேரளா தவிர்த்து) தென்னாட்டு மாநிலங்களில் சகஜமாகி விட்ட ஒன்றுதானே?
ReplyDeleteடில்லியில் நடந்ததை சரியாக நினைவுகூர்ந்து லிங்க் செய்தது சூப்பர்
கடைசியாக ஒரு கேள்வி: புனித சாத்தான் ஆதரிப்பது எந்த கட்சியை?
ReplyDeleteதேசிய அளவிலும்........
மாநில அளவிலும்?
டியர் கிங் விஸ்வா !!!
Deleteவாக்குகளை பிளப்பது எல்லா மாநிலத்திலும் நடப்பதுதான்.எனினும்,ஒரு அரசியல் கட்சி ஒரு மாநிலத்தில் செய்த தவறை இன்னொரு மாநிலத்திலும் செய்து தன்னுடைய வாய்ப்பை தானே கெடுத்துகொள்வது என்பது அநேகமாக பா.ஜ.க.வால் மட்டுமே சாத்தியம்.
தேசிய அளவில் பா.ஜ.கட்சி மட்டுமே ஒரே முதலாளித்துவ கட்சியாக விளங்குகிறது.எனினும் அக்கட்சியுலுள்ள ஒரே குறை அது தாராளவாத (லிபரல்)கட்சியல்ல என்பதுதான்.காங்கிரஸ் போன்ற "கம்யூனிஸ"அடிவருடி கட்சியோடு ஒப்பிட்டால் பா.ஜ.கட்சி ஒரு சிறந்த வலதுசாரி கட்சி என்பதில் மாற்று கருத்தில்லை.ஆக,தேசிய அளவில் அடியேனின் ஆதரவு பா.ஜ.க.வுக்கே!!!
மாநில அளவிலா...?மாநில கட்சிகள் அதிக அளவு செல்வாக்கு பெறுவது நமது நாட்டின் வளர்ச்சிக்கு கண்டிப்பாக ஊறு விளைவிக்கும்.குறிப்பாக,தமிழ்நாட்டின் திராவிட இயக்கங்களும்,மகாராஷ்டிராவின் சிவ சேனையும் மாநில உணர்வை தூண்டி விட்டு செய்யும் துவேச அரசியல் நிச்சயமாக நமது தேசத்திற்கு நன்மை பயக்காது.இம்மாதிரியான கட்சிகளை விட காங்கிரஸ் போன்ற ஊழல் கட்சிகளே பெட்டர்!!!