Thursday, 13 June 2013

"மரண மாத்திரை"

                                               RAYMOND CHOW -வுடன் ப்ரூஸ் லீ!!

ப்ரூஸ் லீயை பற்றி சமீபத்தில் படித்த ஒரு தகவல் அடியேனை மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது.ப்ரூஸ் லீ அமெரிக்காவில் பிறந்த சீனர்.ஆரம்ப காலத்தில் தொலைகாட்சி தொடர்களில் நடித்தவர்,பிறகு ஹாங்-காங் சைனீஸ் படங்களில் நடித்து உலக புகழ் எய்தியவர்.அவர் நடித்த மொத்த படங்களே வெறும் ஆறு படங்கள்தான்.ஆறாவது படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ,மர்மமான முறையில் ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தார்...........இத்யாதி....இத்யாதி....தகவல்கள் அல்ல...இவையெல்லாம் இந்த உலக உருண்டையில் வசிக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் தெரிந்த தகவல்கள்தான்.....அடியேன் சொல்லவந்தது இவற்றையல்ல......ப்ரூஸ் லீயின் மரணத்திற்கு காரணமாயிருந்த ஒரு மாத்திரையை பற்றி...!!!

ப்ரூஸ் லீ கடந்த 1973ஆம் வருடம் ,ஜூலை 20அன்று திடீரென்று இறந்தார்.அவரது மரணம் உலகம் முழுதும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மக்கள் பொது இடங்களில் கூடி கதறி அழுதார்கள்.பல இடங்களில் "ப்ரூஸ் லீ கொல்லப்பட்டார்"என்ற வதந்தி பரவியதால் ,அவரது ரசிகர்கள் வன்முறையிலும் ஈடுபட்டனர்.ப்ரூஸ் லீ விஷமிடப்பட்டு கொல்லப்பட்டார் என்ற வதந்தி கிட்டதட்ட உலகம் முழுதும் பரவியதால் பெரும் குழப்பமும்,பதட்ட சூழ்நிலையும் ஏற்பட்டன.அரசுகள் செய்வதறியாது திகைத்தன.பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்னையாக ப்ரூஸ் லீயின் திடீர் மரணம் உருவெடுத்தது.

ப்ரூஸ் லீ தனது படங்களில் தற்காப்பு கலையான "குங்-பூ"வை பயன்படுத்தியதால் கோபம்கொண்ட சில "சைனீஸ் மாஸ்டர்கள்"அவரை விஷமிட்டு கொன்றுவிட்டார்கள் என்ற பிரதான வதந்தி (தற்போதும் இந்த வதந்தி உயிரோடு இருக்கிறது!!!)அங்கிங்கென்றில்லாமல் எங்கெங்கும் பரவியதால் அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்றறிய ஹாங்-காங் அரசு ஒரு மருத்துவர் குழுவை நியமித்தது.அந்த குழுவில் மொத்தம் மூன்று டாக்டர்கள் நியமிக்கப்பட்டார்கள்.ஒருவர் சீனர்.இன்னொருவர் பிரிட்டிஷ்காரர்.மற்றொருவர் அமெரிக்கர்.

இந்த மூவர் குழு ப்ரூஸ் லீயின் உடலை தனி தனியாக போஸ்ட் மார்ட்டம் செய்தது.மூவருமே தங்கள் பரிசோதனை முடிவை அரசுக்கு தனி தனியே அனுப்பி வைத்தார்கள்.இந்த மூன்று பிரேத பரிசோதனை அறிக்கைகளும் ப்ரூஸ் லீயின் மரணத்தை பற்றி ஒரே மாதிரியான முடிவையே தெரிவித்தன.

1.ப்ரூஸ் லீ -யின் மரணம் இயற்கையானது.
2.ப்ரூஸ் லீ விஷமிடப்பட்டு கொல்லப்படவில்லை.
3.ப்ரூஸ் லீயின் உடலில் எந்த விஷமும் காணப்படவில்லை.உள்காயங்களோ,வெளிக்காயங்களோ எதுவும் இல்லை.
4.ப்ரூஸ் லீ கடும் தலைவலிக்காக சாப்பிட்ட மாத்திரையின் பக்க விளைவினால் (SIDE EFFECT)அவர் மரணமடைந்தார்.

ப்ரூஸ் லீயின் முதலாளியும்,புகழ்பெற்ற "GOLDAN HARVEST பட நிறுவனத்தின் அதிபருமான ரேமாண்ட் சோ (RAYMOND CHOW),ப்ரூஸ் லீ இறப்பதற்கு சில மணி நேரத்திற்குமுன் சர்ச்சைக்குரிய "அந்த மாத்திரையை"உட்கொண்டதாக விசாரணை குழுவிற்கு சாட்சியளித்தார்.ப்ரூஸ் லீயின் மனைவி லிண்டாவும் தனது கணவர் தொடர்ந்து அந்த மாத்திரையை சாப்பிட்டு வந்ததாக சாட்சியளித்தார்.இதே போன்ற ஒரு சாட்சியை விசாரணை குழுவில் அளித்த மற்றொரு பிரபலம் அப்போதைய ஜேம்ஸ் பாண்ட் நடிகரான ஜார்ஜ் லேசன்பி!!

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உடனடியாக அந்த மாத்திரை தடை செய்யப்பட்டது.மாவீரன் ப்ரூஸ் லீயை கொன்ற அந்த மாத்திரைகள் பொது இடத்தில் கொட்டப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது.மாத்திரையை தயாரிக்கும் ஜெர்மானிய நிறுவனம் செய்வதறியாமல் திகைத்தது.நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகே அந்நிறுவனத்தின் மீதான தடைகள் நீக்கப்பட்டன.

அதெல்லாம் சரி.....ஆனானப்பட்ட ப்ரூஸ் லீயையே "போட்டு தள்ளிய"அந்த மாத்திரை என்னவோ...?என்று கேட்கிறீர்களா.....?அந்த "கொலைகார"மாத்திரை....

                        "ASPIRIN "....!!!                                                        

Friday, 31 May 2013

உலக பயங்கரவாதிகளே!!!ஒன்றுபடுங்கள்!!!



எனதருமை பயங்கரவாத பெருமக்களே!!   தீவிரவாதிகளே!!   நிழலுலக மாபியாக்களே !!
மத அடிப்படைவாத சகோதரர்களே!!  சமதர்ம தோழர்களே!!  உங்கள் அனைவரையும் வருக வருகவென வரவேற்கிறோம்.

இன்றைய தினம் உலக மக்களின் நலனுக்காக அல்லும்,பகலும் உழைக்கும் நம்மை போன்ற பயங்கரவாத சகோதரர்கள் இங்கே ஒன்றுகூடி ,நமது எதிர்கால திட்டங்களையும்,லட்சியங்களையும்,செயல்பாடுகளையும் தீர்மானிக்க இருக்கிறோம்.பயங்கரவாதிகள் என்றாலே ஏதோ கிள்ளுக்கீரை என நினைத்து நம்மை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் இன்று "லபோ திபோ"என்று வாயிலும்,வயிற்றிலும் அடித்துக்கொண்டு கூப்பாடுபோடும் அவலத்திற்கு ஆளாக்கிய பெருமை நமக்கு உண்டு.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட "மக்கள் விரோத"அரசுகள் நம்மை கண்டு மிரண்டு செய்வதறியாது திகைக்கின்றன.ஊடகங்கள் நடுங்குகின்றன.

குண்டு வைத்து தகர்ப்பது,துப்பாக்கியால் சுட்டு தாக்குவது,மனித வெடிகுண்டாக வெடிப்பது போன்ற "தியாக"செயல்களில் ஈடுபடும் நமக்கு இந்த உலகம் என்ன கைமாறு செய்திருக்கிறது?நமது தோழர்களை "என்கௌண்டர்"என்ற பெயரில் சுட்டுக்கொல்லும் "கொடுமை"தான் இந்த உலகம் நமக்கு தந்த கைமாறு !!!

இந்தியா என்ற பெயரில் ஒரு சோப்ளாங்கி நாடு இருக்கிறது.கடந்த இருபது,முப்பது ஆண்டுகளாக அந்த நாட்டை நமது தோழர்கள் குத்தகைக்கு எடுத்து "பயங்கரவாத"தொழில் நடத்தி வருகிறார்கள்.ஆயிரக்கணக்கான மக்களை சுட்டுக்கொன்று அந்நாட்டின் மக்கள் தொகையை குறைக்க அரும்பாடு பட்டு வருகிறார்கள்.போலீஸ் வாகனங்களை கண்ணிவெடி வைத்து தகர்த்து போக்குவரத்து நெரிசலை குறைத்து வருகிறார்கள்.ஏராளமான குண்டுவெடிப்பை நிகழ்த்தி அரசுக் கட்டிடங்களையும்,பொது சொத்துக்களையும் தகர்த்து கட்டுமான தொழிலாளர்களுக்கு "புதிய வேலை வாய்ப்பை "பெற்று தந்திருக்கிறார்கள்.அந்நாட்டு அரசும் சரி.அதிகார வர்க்கமும் சரி.நம்மை தங்கள் "உடன்பிறப்பு"க்களாகவே கருதி இன்று வரை நமக்கெதிராக எந்தவொரு உருப்படியான நடவடிக்கைகளையும் எடுக்காமல் நம்மோடு இணக்கமாக நடந்துவருவதால் இன்னும் பல வருடங்கள் நமது தொழில் சிறப்பாக நடக்கும் வாய்ப்பு காணப்படுகிறது.எனவே,நமது அயல்தேச தோழர்கள் தங்கள் தொழிலை சிறப்பாக நடத்த இந்தியா போன்ற நாடுகளை அணுகினால் சிறப்பான எதிர்காலம் அவர்களுக்கு கிட்டும்.

அமெரிக்காவும்,இஸ்ரேலும் தான் நமது ஜென்ம விரோதிகள்.நாம் அவர்களில் ஒருவரை கொன்றால்,பதிலுக்கு நமது தோழர்கள் ஆயிரம் பேரையாவது சாகடித்து வெறியாட்டம் போடுகிறார்கள்.மனித தன்மையே சிறிதும் இல்லாத இவ்விரு நாடுகளும் இந்தியாவை பார்த்தாவது அஹிம்சையையும்,மனித நேயத்தையும் கற்றுக்கொள்ளவேண்டும்.

ஒரு குண்டு வெடிப்பை நடத்த நாம் எவ்வளவு பாடுபடுகிறோம் என்பதை இந்த சமூகம் சிந்திக்க வேண்டும்.குண்டு வெடித்தவுடன் அறிவுகெட்டத்தனமாக அதில் சிக்கி பலர் மாண்டு போகிறார்கள். படுகாயத்தோடு உயிர் தப்பி "இழப்பீடு"பெற்று ,அடுத்த குண்டு வெடிப்பில் சாகும் வரை வாழும் அதிர்ஷ்டம் சிலருக்கு கிடைக்கிறது.இறந்தவர்கள் பற்றியும்,காயமடைந்தவர்கள் பற்றியும் விசாரப்படும் இந்த சமுதாயம் ,குண்டு வைத்த நமது தோழர்கள் பற்றியோ,அவர்களின் இலட்சியங்கள் பற்றியோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை.ஏனிந்த பாரபட்சம்...?நாங்களெல்லாம் மனிதர்களில்லையா...?

முதலில் எங்களை பற்றிய எதிர்மறை சிந்தனைகளை கைவிடவேண்டும்.விபச்சாரம் செய்பவர்களை "பாலியல் தொழிலாளர்கள்"என்று அழைப்பதைப்போல் ,பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் எங்கள் தோழர்களை "குற்றவியல் தொழிலாளர்கள்"என்று அழைக்கவேண்டும்.
எங்களுக்கென்று "நல வாரியங்கள்"உருவாக்கப்படவேண்டும்.அரசுப்பணிகளில் பிற்ப்படுத்தப்பட்ட,மிக பிற்ப்படுத்தப்பட்ட பயங்கரவாதிகளுக்கு "இட ஒதுக்கீடு"செய்யவேண்டும்.நலிவுற்ற மூத்த பயங்கரவாதிகளுக்கு பென்ஷன் வழங்கவேண்டும்.மனித வெடிகுண்டாக செயல்பட்டு தங்கள் இன்னுயிரை ஈந்த பயங்கரவாத "தியாகி"களுக்கு மணிமண்டபம் கட்டவேண்டும்.மேற்கண்ட எங்கள் கோரிக்கைகள் நிறைவேற அனைத்து  "மத சார்பற்ற"சக்திகளும் அரசுக்கு வலியுறுத்தவேண்டும்.

இறுதியாக ,எங்களோடு நேரடியாக களமிறங்காவிட்டாலும் ,எங்கள் லட்சியங்களுக்கு ஆதரவாக எப்போதும் செயல்படும் மனித உரிமைவாதிகள்,பகுத்தறிவுவாதிகள்,சமதர்மவாதிகள்,தலித்வாதிகள்,பெண்ணுரிமைவாதிகள் ஆகியோருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறோம்.
உங்கள் ஆதரவோடு எங்களின் லட்சிய பயணம் ஓயாமல் தொடரும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.
  

தோரா-போரா பள்ளத்தாக்கிலும்,முள்ளி வாய்க்காலிலும் நம்மை வீழ்த்திவிட்டதாக கொக்கரிக்கும் குள்ள நரிகளின் கொட்டத்தை ஒடுக்க சிறுத்தையென சீறி பாய்ந்திடுவோம்.
வாருங்கள் தோழர்களே!!    எதிர்கால உலகம் நமது கையில்!!


உலக பயங்கரவாதிகளே,ஒன்றுபடுங்கள்!!! இழப்பதற்கு நம்மிடம் ஒன்றுமில்லை!!! ஒழித்துக்கட்டுவதற்க்கோ இந்தியா இருக்கிறது!!!

Sunday, 19 May 2013

வாய் மெய்யை வெல்லும்!!!

                                                        ஜோசப் கோயபல்ஸ்

            ரீச் மார்ஷல் ஹெர்மன் கோயரிங்குடன் ஒரு உற்சாக அரட்டை!!!
          
அண்ட புளுகன் ,ஆகாச புளுகன் என்றெல்லாம் ,நம்ம ஊரில் பொய் பேசி திறிவோரை "புகழ்ந்து"பல பட்டங்களை வழங்கி அம்மாதிரியானவர்களை கொண்டாடுவது நமக்கு பழக்கமாகிவிட்டது.பொய் பேசுவது ஒரு கலையாகவே மதிக்கப்படும் அளவுக்கு பிரதம மந்திரி முதல் பீட்சா டெலிவரி பாய் வரை நமது புண்ணிய பாரத தேசத்தில் அனைவரும் புளுகோ புளுகென்று புளுகி தள்ளுகிறார்கள்.வாயை திறந்தால் உண்மையை மட்டும் பேசுவதில்லை என்று அவனவன் கங்கணம் கட்டாத குறையாக ரீல்களையும்,கப்ஸாக்களையும்,பூசுற்றல்களையும் அனுதினமும்,அனவரதமும் பேசிக்கொண்டு திறிகிறான்.

இப்படியாகப்பட்ட ஆசாமிகளில் சில கில்லாடிகளும் உண்டு.தங்கள் பொய்களை ஒரு சமூக மாற்றத்தின் திறவுகோலாக பயன்படுத்தி  தாங்கள் நம்பும் கொள்கைகளை அரியணை ஏற்றும் வாய்ப்பை பெற்று அதன்மூலமாக தங்களின் அதிகாரத்தை பெருக்கி கொண்டு ,மாற்று கொள்கை கொண்டவர்களை சமூக விரோதிகளாகவும்,வந்தேறிகளாகவும்,ஆதிக்க வெறியர்களாகவும் சித்தரித்து,முடிந்தால் அவர்களை ஒழித்துக்கட்டி,சர்வ வல்லமை பெற்ற சூப்பர் தலைவர்களாக வலம்வரும் வாய்ப்பும் சில கில்லாடிகள் பெற்றுவிடுகிறார்கள்.

அப்படிப்பட்ட திறமை வாய்ந்த உலக மகா புளுகர்களில் தலையாய இடத்தை பெற்றவர் ஜோசப் கோயபல்ஸ்.இன்றளவும் இவரை போன்ற திறமைவாய்ந்த பொய்யர் யாரும் தோன்றிடவில்லை என்பதே அண்ணாரின் மேதமைக்கு சான்று பகரும்.

பால் ஜோசப் கோயபல்ஸ் 1897ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்தவர்.கத்தோலிக்க மதத்தவர்களுக்கே உரிய "யூத வெறுப்பு"கொண்ட சூழலில் வளர்ந்தவர்.பிற்காலத்தில் நாஜி கட்சி ஆட்சியமைத்தபோது அதில் மனிதவள மேம்பாடு,மற்றும் பிரசார அமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் யூதர்களை தாக்குவதற்காகவே பல பொய்க்கதைகளை உருவாக்கி மக்கள் மத்தியில் உலவ விட்டார்.அதில் முக்கியமானது "யூதர்கள் கிறிஸ்த்துவ குழந்தைகளை கொன்று,வறுத்து சாப்பிடுகிறார்கள்.அவர்கள் நர மாமிசம் சாப்பிடும் காட்டுமிராண்டிகள்"என்பதே.

கோயபல்ஸிடம் சில வித்தியாசமான திறமைகள் இருந்தன.வரலாற்று ஆசிரியர்கள் அவருடைய கால்களை "கழுதையின் கால்கள்"என்று கேலியாக குறிப்பிட்டாலும் அது அவருடைய வேடிக்கையான அடையாளமாகவே விளங்கியது.அவரை மேடையில் பார்த்தாலே பெண்களும்,குழந்தைகளும் கேலியாக சிரித்தார்கள்.ஆனால்,அவர்களே கூட கோயபல்ஸின் பேச்சுக்களை மெய்மறந்து கேட்டதாக தெரிகிறது.அந்த அளவு பேச்சு திறமையும்,எழுத்தாற்றலும் வாய்க்கபெற்றவர் கோயபல்ஸ்.இரண்டாம் உலக போர் துவங்கிய காலத்தில் மூன்று வகையான பிரசார உத்திகளை மேற்கொண்டார் கோயபல்ஸ்.முதலாவது முணுமுணுப்பு பிரச்சாரம்.அடுத்து ஆரூட பிரச்சாரம்.மூன்றாவது சொன்னதையே பலமுறை திரும்ப சொல்லும் பிரச்சாரம்.இம்மூன்றையும் அவர் பயன்படுத்திய விதம் இன்றைக்கும் பல அரசியல் கட்சிகளுக்கு பாடமாக வைக்கும் அளவுக்கு புகழ் பெற்றது.

முதலாவது முணுமுணுப்பு பிரச்சாரம்;

பொதுமக்கள் கூடும் இடங்களில் "தேர்ந்தெடுக்கப்பட்ட"சில நபர்கள் ஒருவரை ஒருவர் அறியாதவர்போல் நின்றுகொண்டு பேசுவார்கள்.அதில் ஒருவர் "என்ன இருந்தாலும் ஹிட்லர் மாதிரி ஒரு தலைவர் உண்டா..?எந்த கொம்பனும் அவருக்கு ஈக்குவலா வரமாட்டான்"என்பார்.மற்றொரு நபரோ வேண்டுமென்றே அவர் கருத்தை மறுத்து வாதிடுவார்.முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதால் மறுப்பவரின் வாதம் பலவீனமாகவே இருக்கும்.ஹிட்லரை ஆதரித்து பேசுபவரின் வாதம் அழுத்தமாகவும்,கேட்பவரை ஏற்க்கும்படியும் இருக்கும்.இந்த "நாடக"வாதத்தின் இறுதியில் ஹிட்லரை எதிர்த்து பேசிய நபர் தனது "தவறை"உணர்ந்து,திருந்தி நாஜி ஆதரவாளர் ஆகிவிடுவார்.அவர்களின் வாதங்களை செவிமடுக்கும் மக்களுக்கும் ஹிட்லரே  தங்களை யூதர்களிடமிருந்து மீட்க வந்த ரட்சகர் என்ற சிந்தனை மேலோங்கும்.இதுவே முணுமுணுப்பு பிரசாரத்தின் வெற்றி!

அடுத்து ஆரூட பிரச்சாரம்;

கிட்டதட்ட ஜெர்மனியில் வாழ்ந்த அத்தனை ஜோசியர்களுக்கும் பணம் கொடுத்து அவர்களை ஒரே மாதிரி ஆரூடம் சொல்ல வைப்பது."போரில் ஜெர்மனி மிக பெரிய வெற்றி பெரும்.அமெரிக்காவும்,பிரிட்டனும் படுதோல்வியடைந்து ஜெர்மனியிடம் சரணடையும்.கிரக நிலைகள் நமக்கு சாதகமாக உள்ளதால் யூதர்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வெளியேறவேண்டிய நெருக்கடிக்கு ஆளாவார்கள்".இதுபோன்ற போலி ஆரூடங்களை அனைத்து ஜோசியர்களும் மக்களிடம் சொல்லவைத்து அவர்களை நம்ப வைத்தார்கள்.

அடுத்து சொன்னதை திரும்ப சொல்லும் பிரச்சாரம்;

ஹிட்லரும்,பிற நாஜி தலைவர்களும் பேசிய பேச்சுக்களை திரும்ப திரும்ப மக்களிடம் எடுத்து கூறுவது.வானொலி கண்டுபிடிக்க பட்டதால் இந்த பிரச்சாரம் மக்களிடம் எளிதில் சென்றடைய முடிந்தது.ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பித்தால் அதை சொல்பவனே ஒரு கட்டத்தில் அதை உண்மை என நம்ப ஆரம்பித்து விடுவான்.இது கோயபல்சின் ஆகபெரிய உத்தி!

அவருடைய சொந்த பத்திரிக்கையான "தி அட்டாக்"-கில் பின்வருமாறு எழுதினார்.
"பாலஸ்தீனத்தை சேர்ந்த யூத இனத்தினர் ஜெர்மனியை ஆக்கிரமித்து நமது வளங்களை சுரண்டி வருகிறார்கள்.நாமோ சூடு சொரணையில்லாமல் யூதர்களிடம் கைகட்டி சேவகம் செய்து வருகிறோம்.முதல் உலக போரில் ஜெர்மனி தோல்வியடைய யூதர்கள் செய்த சதிகளுக்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.அவற்றை நான் வெளியிட்டால் யூதன் எவனும் தெருவில் நடமாட முடியாத நிலை ஏற்படும்.நமது நாஜி கட்சியையும்,அதன் ஒப்பற்ற தலைவர் ஹிட்லரையும் "பயங்கரவாதிகள்"என யூத பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகின்றன.நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல.நாங்கள் நோய் தீர்க்கும் மருத்துவர்கள்.யூத இனம் என்ற நச்சு கிருமியை ஒழித்து இந்த உலகை காக்க வந்த சுகாதார வல்லுனர்கள்.எந்த விலை கொடுத்தாவது இதை நாங்கள் சாதிப்போம்".

ஹிட்லர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் கோயபெல்சை ஜெர்மனியின் அதிபராக நியமித்தார்.ஆனால்,துரதிர்ஷ்டவசமாக (அல்லது அதிர்ஷ்டவசமாக)கோயபல்ஸ் ,ஹிட்லர் இறந்த அடுத்த நாளே குடும்பதுடன் தற்கொலை செய்துகொண்டார்.
ஜெர்மனியின் "ஒரு நாள் அதிபர்"ஜோசப் கோயபல்ஸ் நம்மிடமிருந்து மறைந்தாலும் அவர் விட்டு சென்ற "புளுகுகள்,கப்சாக்கள்,அவதூறுகள்"-ஆகியவற்றின் மொத்த அடையாளங்களுடன் வாழும் பல அண்ட புளுகர்கள் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்-பகுத்தறிவாளர்கள் என்ற நாமத்தில்!!!                                                        
 

Saturday, 11 May 2013

தப்பு தப்பாய் ஒரு தப்பு!!!





ஒரு வழியாக கர்னாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி பா.ஜ.கட்சிக்கு பெரும் தோல்வியும்,காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பாரா வெற்றியும் கொடுத்துள்ளது.தேர்தல் முடிவுகள் இப்படித்தான் அமையும் என அனைவரும் ஓரளவு யூகித்திருந்தாலும் இந்த முடிவுகள் பா.ஜ.கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்ப்படுத்தியுள்ளதற்க்கு காரணமான முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிற்கு ஒரு வெற்றியாகவே கருதப்படுகிறது.

கர்நாடகாவில் பா.ஜ.கட்சி ஆட்சியில் அமர காரணமாக விளங்கியவர் எடியூரப்பா.அவரது தலைமையில் அந்த கட்சி கர்நாடகாவில் வெற்றிகளை குவித்தது.இது கட்சியில் இருந்த அவரது எதிர்ப்பாளர்களுக்கு (குறிப்பாக; அனந்த குமார்)அவர் மீது பொறாமையையும்,வெறுப்பையும் தூண்டியது.சுரங்க ஊழல் விவகாரம் வெளியானபோது இவர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி எடியூரப்பாவை பதவி விலக வைத்து ,கட்சியிலிருந்து அவரை ஓரங்கட்ட செய்தனர்.பலமுறை இவர்களை பற்றி கட்சி மேலிடத்தில் புகார் அளித்து பார்த்தார் எடியூரப்பா.பலன் ஏதுமில்லை.விளைவு ,கட்சியில் இருந்து வெளியேறி கர்னாடக ஜனதா என்ற புது கட்சி தொடங்கி தனியாக போட்டியிட்டு ,வாக்குகளை பிளந்து காங்கிரஸின் வெற்றிக்கு வழிவகுத்துவிட்டார்.கோஷ்டி அரசியலில் காங்கிரஸுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று பா.ஜ.க.வினர் நாட்டு மக்களுக்கு இதன் மூலம் செய்தி தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸை பொறுத்தவரை இது அவர்களின் சொந்த வெற்றியல்ல.இது எடியூரப்பா அவர்களுக்கு கொடுத்த தட்சிணை.மாநிலத்தின் மிக பெரிய வாக்கு வங்கியான லிங்காயத் (வீர சைவர்)வாக்குகளை எடியூரப்பா பிளந்ததால்,பா.ஜ.கட்சி பரிதாபமாக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. பதவியில் அமரும் புதிய முதல்வர் சித்தராமய்யா நன்றி கடனாக எடியூரப்பா மீதான ஊழல் வழக்குகளை நீர்த்து போகவைத்து அவரை காப்பாற்றி விடுவார் என எதிர்பார்க்கலாம்.

இந்த கூத்துக்களை பார்க்கும்போது அடியேனுக்கு டெல்லியில் பா.ஜ.கட்சி செய்த அதே கோமாளித்தனங்களை கர்நாடகாவிலும் அரங்கேற்றியதால் நேர்ந்த விளைவோ என தோன்றியது.டெல்லி மாநிலத்தில் 1993ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க.பெரும் வெற்றி பெற்று திரு.மதன்லால் குரானா தலைமையில் ஆட்சியமைத்தது.இரண்டாண்டுகளுக்கு பிறகு அவரை நீக்கிவிட்டு திரு.சாஹிப் சிங் வர்மாவை முதல்வராக்கியது.பிறகு இரண்டாண்டுகள் கழித்து அவரையும் நீக்கிவிட்டு திருமதி.சுஷ்மா ஸ்வராஜை முதல்வராக நியமித்தது.அவர் மூன்ற மாதம் மட்டுமே முதல்வர் பதவி வகித்தார்.பிறகு வந்த தேர்தலில் பா.ஜ.க.வை மக்கள் தோற்கடித்தனர்.தொடர்ந்தால்போல் மூன்று தேர்தல்களில் அந்த கட்சியை மக்கள் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.மதன்லால் குரானாவை நீக்கியதால் அவரது "அரோரா"சமூக வாக்குகளை இழந்தனர்.சாஹிப் சிங் வர்மாவை நீக்கியதால் அவரது "ஜாட்"சமூக வாக்குகளையும் பா.ஜ. க.வினர் இழந்தனர்.இதே கோமாளித்தனங்களை தான் கர்நாடகாவிலும் பா.ஜ.க.தலைவர்கள் செய்தனர்.

எடியூரப்பாவை நீக்கியதால் "லிங்காயத்"வாக்கு வங்கி பாதிக்கப்பட்டது.பிறகு முதல்வரான சதானந்த கௌடாவை தொடர்ந்து ஆள  விடாமல்,அவரையும் நீக்கி ஜெகதீஸ் ஷெட்டர் அவர்களை முதல்வராக்கினார்.இதனால் "ஒக்கலிகா"வாக்குகளையும் இப்போது இழந்துள்ளனர்.டெல்லியில் செய்த அதே தவறை கொஞ்சமும் புத்திசாலித்தனமில்லாமல் இங்கே கர்நாடகாவிலும் பா.ஜ.க.தலைவர்கள் செய்துள்ளதை பார்க்கும்போது தவறு செய்வதில் சற்றும் பாரபட்சமில்லாமல்  நடந்து  கொள்ளும் அவர்களின் நேர்மையை பாராட்ட தோன்றுகிறது.நல்லவேளை,குஜராத் கலவரத்திற்கு பொறுப்பேற்று நரேந்திர மோதி பதவி விலகவேண்டும் என்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கோரிக்கையை பா.ஜ.க.புறக்கணித்தது.இல்லையென்றால் டெல்லியை போல் குஜராத்தும் பா.ஜ.க."கோட்டை"விட்ட மாநிலமாக மாறியிருக்கும்.

நரேந்திர மோதி பதவி விலகவில்லை.குஜராத் பிழைத்தது!!!

Saturday, 4 May 2013

ஒரு கைதியின் வைரி!!!




பாகிஸ்தான் என்ற பூலோக நரகத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக அடைபட்டிருந்த இந்தியர் சரப்ஜித் சிங் அந்நாட்டு உளவு  கொலை படைகளால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்.சக கைதிகள் இருவர் அவரை தாக்கியதில் அவர் படுகாயமடைந்து கோமா நிலைக்கு சென்று உணர்வு திரும்பாத நிலையில் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனைக்குரிய சம்பவம்.தொட்டதற்கெல்லாம் "மனித உரிமை"என்று ஓலமிடும் முற்போக்கு மொக்கைகள் எவனும் இந்த படுகொலையை பற்றி வாயை திறக்காமல் மௌனம் சாதிப்பது அவன்களின் யோக்கியதையை நன்றாக அம்பலப்படுத்துகிறது.அப்பாவிகள் கொல்லப்பட்டால் அது சாதாரண விஷயம்.பயங்கரவாதிகள் கொல்லப்பட்டால் அது மனித உரிமை மீறல்.இதுதானே இந்த "தீரா"விட ,தலித்திய, பொதுவுடைமை,மாவோயிஸ  கும்பல்களின் தாரக மந்திரம்!!!

ஒரு சீக்கியர் பிரதமராயிருந்தும் சீக்கியரான சரப்ஜித் சிங்குக்கு எந்த உபயோகமும் இல்லை.ஒரு சீக்கியன் ஒன்றேமுக்கால் லட்சம் வீரர்களுக்கு சமம்.நமது புண்ணியவான் டாக்டர் மன்மோகன்சிங் கோஹ்லி அவர்களோ,ஒன்றேமுக்கால் லட்சம் கோடி ஊழல் செய்தவர்களை சமமாக கொண்டவர்.இப்படியாகப்பட்டவரின் தலைமையில் இந்நாடு தொடர்ந்து ஆளப்பட்டால் அது சீக்கிய மதத்துக்கு மட்டுமல்ல,ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் பெரும் அவமானமாகிவிடும்.அடியேனை பொறுத்தவரையில் சரப்ஜித் சிங்குக்கு  பாகிஸ்தானியரை விட மன்மோகன் சிங்  போன்ற அல்லக்கைகளே உண்மையான வைரிகள்!!!

பாகிஸ்தான் சிறையில் தாக்கப்பட்டு உயிரிழந்த சரப்ஜித் சிங் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்!!!
வாஹ் குருஜீ தீப்தக்!!!     வாஹ் குருஜீ கால்சா!!!

Sunday, 28 April 2013

தாயே, இது என்ன கை...?


அது 1982-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்.சரியாக நினைவில்லை.முன்னேபின்னே இருக்கலாம்.மத்தியில் இந்திரா காந்தி தலைமையில் இந்திரா காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம்.பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரச்னைகளாலும் ,காங்கிரஸ் கட்சிக்கே உரிய ஊழல் அரசியலாலும் நாடு பெரும் நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்து கொண்டிருந்த போறாத காலம்.
அப்போது நான் நான்காம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன்.(இன்றுவரை அதைத்தானே படித்திருக்கிறாய் என்று கேட்டுவிடாதீர்கள்) அடியேனுடைய ஊர் பள்ளிபாளையம் என்றாலும் நான் படித்தது குமாரபாளையத்தில்.இந்நகரம் பள்ளிபாளையத்திலிருந்து 13கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.அங்கே பாட்டி வீட்டில் தங்கி படித்துகொண்டிருந்தேன்.
அன்றைய காலத்தில் அடியேனுக்கு அரசியல் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அறிவு கூட கிடையாது.
இந்திரா காந்தியை நேருவின் மகள் என்று தெரியும்.அவர் பிரதமராக உள்ளார் என்பதும் தெரியும்.ஆனால் பிரதமர் என்றால் என்ன அர்த்தம் என்று மட்டும் எனக்கு தெரியாது.
அப்படிப்பட்ட ஞானசூனியமான அடியேனுக்கு ஒருநாள் ஒரு பெரும் அரசியல் தலைவரை நெருங்கிசென்று கைக்குலுக்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது.
இந்திரா காந்தியின் ஊழல் ஆட்சிக்கு எதிராக அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஒரு மாபெரும் நடைபயணத்தை "கன்னியாகுமரியிலிருந்து காஸ்மீர்"வரை தொடங்கி நடந்து வந்தார்.அன்றைய காலக்கட்டத்தில் தேசம் முழுவதும் பெரும் செல்வாக்கு பெற்ற மக்கள்  தலைவர் அவர்.நேர்மைக்கும்,கண்ணியத்திற்கும் பேர்போன தலைவர்.அனைத்து தரப்பு மக்களின் அன்பை பெற்ற மாபெரும் தலைவர் அவர்!!!
நடைபயணத்தின் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் பவானி நகருக்கு அவர் வந்து சேர்ந்தார்.பவானிக்கும்,குமாரபாளையம் நகருக்கும் இடையே காவேரி ஆற்று பாலம் உள்ளது.மிகவும் குறுகலான அந்த பாலம் வழியாகத்தான் அன்று போக்குவரத்து நடந்துகொண்டிருந்தது.அந்த பாலத்திலிருந்து சற்று அருகில் என்னுடைய பாட்டி  வீடு இருந்ததால் அந்த தலைவரை நேரில் பார்க்க எனக்கு பெரிய சிரமம் ஒன்றும் ஏற்படவில்லை.
உச்சி வெயில் மண்டையை பிளக்கும் கடுங்கோடை காலம்.அந்த தேசிய தலைவரை தரிசிக்க பவானி பாலத்தில் ஏராளமான கூட்டம் நிரம்பி வழிந்தது.சுண்டைக்காய் பயலான நானும் எனது சக சுண்டைக்காய் நண்பர்களும் ஆளுக்கொரு குச்சி ஐஸ்க்ரீம் சகிதம் அங்கே ஆஜராகியிருந்தோம்.அந்த தேசிய கட்சியின் உள்ளூர் தலைவர்களுள் ஒருவர் எனது உறவினர் என்பதால் நான் அவர் அருகில் நின்றுகொண்டு தலைவர் எப்போது வருவார்  என்று நிமிடத்திற்கு ஒருமுறை அவரை நச்சரித்து கொண்டிருந்தேன்.
சுமார் ஒரு மணிநேர காத்திருப்பிற்கு பிறகு தலைவர் பவானியில் இருந்து புறப்பட்டுவிட்டார் என்ற தகவல் கிடைக்க கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்திரா காந்தியின் ஜென்ம விரோதி என்று கருதப்பட்ட அந்த தலைவரை பார்க்க கிட்டதட்ட அனைத்து கட்சிக்காரர்களும் அங்கே ஆஜராகிவிட்டார்கள்.பெரும் ஜனத்திரளிடையே அந்த தலைவர் நடந்து வந்தார்.அவர் பார்வைக்கு கிடைத்ததும் மக்களின் உற்சாகம் பொங்கிவிட்டது.அந்த தலைவரை வாழ்த்தி பெரும் குரலில் கோஷமிட்டார்கள்.அர்த்தம் புரியாவிட்டாலும் நானும் உற்சாகமாக அந்த ஹிந்தி வாழ்த்தொலியை எழுப்பினேன்.தலைவர் அருகில் வரவர கூட்டத்தின் தள்ளுமுள்ளில் மாட்டிகொண்ட நான் அங்கேயும் இங்கேயுமாக இழுக்கப்பட என்னே அதிர்ஷ்டம் பாருங்கள்.சரியாக அந்த தலைவரின் அருகிலேயே நான் வந்துவிட்டேன்.அந்த தலைவர் என்னை பார்த்துவிட்டார்.என்னை பார்த்து ஏதோ சொன்னபடி அவர் கையை நீட்ட முழுக்கை சட்டை அணிந்திருந்த அவரது கையை பிடித்து நான் குலுக்கினேன்.அவரது பெயரை தவிர வேறெதுவும் அடியேனுக்கு தெரியாது.ஆனால் அவர் மாபெரும் ஒரு தேசிய தலைவர் என்று பின்னாளில் அறிந்து கொண்டேன்.அவருடைய கட்சி மீதும் எனக்கு பெரும் மரியாதையை பின்னாளில் வளர்த்துக்கொண்டேன்.
1980களில் அடியேனால் கைக்குலுக்கப்பட்ட அந்த தலைவர் பின்னாளில் இந்தியாவின் பிரதமராக சிறிது காலம் பதவிவகித்தார்.சாத்தானின் மகிமை வாய்ந்த கைகளால் அந்த பதவி அவருக்கு கிடைத்ததா என்று அடியேனுக்கு தெரியாது.ஆனால்,இந்த பதிவை இடும் இன்றைய தினம் ம.தி.மு.க.பொது செயலாளர் திரு.வைகோ அவர்களை குமாரபாளையம் அருகிலுள்ள குப்பாண்டபாளையம் என்ற கிராமத்தில் வைத்து அவரது கையை குலுக்கினேன்.
பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி திரு.வைகோ நடைபயணம் மேற்கொள்கிறார்.ஒரு அவசர வேலையாக குமாரபாளையம் சென்றபோது எதிரில் அவருடைய ஊர்வலம் வந்து கொண்டிருந்தது.ஓய்விற்காக திரு.வைகோ ஓரிடத்தில் அமர்ந்தபோது பலரும் அவரது கையை பிடித்து குலுக்க,அடியேனும் சந்தடிசாக்கில் அவரது கையைபிடித்து குலுக்கினேன்.
அடியேனின் கை அதிர்ஷ்டக்கார கையா என்பது அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் முடிவை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அதெல்லாம் சரி....உன்னால் பிரதமர் ஆக்கப்பட்ட (!)அந்த அதிர்ஷ்டசாலி தேசிய தலைவர் யார் என்று கேட்கிறீர்களா.....?
அவர் முன்னாள் "இளம் துருக்கியர்" முன்னாள் பிரதமர்.ராஜா சந்திரசேகர் சிங்!!!

Saturday, 20 April 2013

சாத்தானின் TOP 10 ஸ்பெஷல் !!!


நண்பர்கள் பலருக்கு அடியேனின் பன்முக எழுத்து திறமையை(!)பார்க்க (படிக்க)ஆவல்.அவர்களின் ஆசையை பூர்த்தி செய்யாவிட்டால் சாத்தானாக பிறந்ததில் என்ன பலன்? இனி வரும் பல பதிவுகளில் சம்பந்தமில்லாமல் எதையாவது பதிவிட்டிருப்பேன்.சாத்தானுக்கு மறை கழண்டுவிட்டதா என்று சந்தேகப்பட்டுவிடாதீர்கள்.இந்த வார (!)பதிவு டாப் டென் இயக்குனர்கள்.அதாவது,சாத்தானை கவர்ந்த.ஹிஹி!!



10.  K.பாலச்சந்தர் (83)
தமிழ் சினிமாவையும் , கைலாசமய்யர்  பாலச்சந்தரையும் பிரித்துப்பார்க்க முடியாது.மேடை நாடகத்திலிருந்து தமிழ் சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு பாணியை வகுத்து,பிடிவாதமாக அதில் பயணித்து வெற்றிகண்டவர்.தனது முதல் படமான நீர்க்குமிழி -யில் நாகேஷை ஹீரோவாக நடிக்க வைத்த துணிச்சல்காரர்.மனித உறவுகளின் பிரச்னைகள்,சமூக அவலங்கள்,சூழலியல் மாற்றங்கள்,காதல்,என்று இவர் கருபொருளாக்கிய திரைப்படங்கள் சக்கைப்போடு போட்டன.ரஜினி,கமல்,விஜய குமார்,ஸ்ரீப்ரியா,பிரகாஷ்ராஜ்    என இவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள் நூற்றுக்கும் மேல்.90-களுக்கு பிறகு இவர் எடுத்த சில படங்கள் அதீத பிரச்சார நெடியுடன் அமைந்ததால் தமிழ் திரையுலகிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.சின்ன திரையில் நுழைந்து சில புகழ்பெற்ற தொடர்களை இயக்கி அங்கேயும்  முத்திரையை பதித்தவர்.


9. பாலு மகேந்திரா (74)
பாலு மகேந்திரா ஒரு ஈழ தமிழர் என்பது நம்மில் பலரும் அறிந்திராத செய்தி.இவரது உண்மையான பெயர் பாலநாதன் மகேந்திரன். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1971ல் தங்கப்பதக்கம் பெற்றார்.அவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரை 'செம்மீன்' படப்புகழ் ராமு காரியத் அவரது 'நெல்லு' படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அப்படத்துக்கு 1972ல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநிலவிருது பெற்றார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவுசெய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977ல் வெளியாயிற்று. 1978ல் தமிழில் அவரது முதல் படமான 'அழியாத கோலங்கள்' வெளியாயிற்று. பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இரண்டு பெண்டாட்டிக்காரன் கதையை வைத்து இவர் இயக்கிய பல படங்கள் பெரும் வரவேற்ப்பை பெற்றவை.(அடியேனுக்கும் இரண்டு பெண்டாட்டிதான்.முதல் பெண்டாட்டியை அரிவாளால் வெட்டி கொன்றேன்.இடம்:கொடுமுடி.முதல் பெண்டாட்டி:ஒரு வாழை கன்று.ஹிஹி!!!)


8. ஜான் வூ (67)
ஜான் வூ ஹாலிவுட்டில் வெற்றிகரமாக கால் பதித்த சீனர்.இவரது ஆக்ஸன் படங்களுக்கு உலகம் முழுதும் பெரும் வரவேற்பு இருக்கிறது.HARD TARGET ,BROKEN ARROW ,FACE /OFF ,போன்ற பல படங்கள் இவரது இயக்கத்தில் வந்திருந்தாலும் அடியேனை பெரிதும் கவர்ந்தது இவரது RED CLIFF .இரண்டு பாகமாக வந்த இந்த ஆக்ஸன் படம் மறக்கமுடியாத ஒரு அற்புதம்.


7. ரோமன் போலன்ஸ்கி (80)
ரஜ்மண்ட் ரோமன் தியெர்ரி போலன்ஸ்கி உலக சினிமாவின் ஆகச்சிறந்த இயக்குனர்.பாரிஸில் பிறந்து போலந்தில் குடியேறிய யூதர். சிறு வயதில்
ஜெர்மானிய ஆதிக்கத்தில் போலந்து சீரழிந்ததை நேரடியாக கண்ணுற்றவர்.இவரது பல படங்களில் வரும் கதாபாத்திரங்கள் உண்மையில் இவரே.தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையே திரைப்படமாக்கி  உலக புகழ் பெற்றவர்.2002-இல் இவரது இயக்கத்தில் வந்த THE PIANIST மெய்சிலிர்க்க வைக்கும் காவியம்.


6. வூடி ஆலன் (78)
ஆலன் ஸ்டீவெர்ட் கோனிக்ஸ்பெர்க்    என்ற வூடி ஆலன் நியூ யார்க்கில் பிறந்த யூதர்.இவர் ஒரு பன்முக திறமையாளர். திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர், எழுத்தாளர், நகைச்சுவையாளர். திரைப்படங்களை எழுதி அவற்றை இயக்கும் இவர் அவற்றில் பெரும்பாலான திரைப்படங்களில் நடித்தும் உள்ளார்.2011-இல் இவர் இயக்கிய MIDNIGHT IN PARIS அவசியம் பார்க்கவேண்டிய படம்.


5. அனுராக் காஷ்யப் (41)
அனுராக் சிங் காஷ்யப் உலக தரத்திலான ஒரே இந்திய இயக்குனர் என்பது அடியேனின் கருத்து.இவருடைய ஒவ்வொரு படமும் அதற்கு சான்று பகரும்.2009இல் வெளிவந்த தேவ் டி (DEV D)படம் ஒன்றே போதும் இவரது திறமைக்கு சாட்சி சொல்ல.நாம் அனைவரும் அறிந்த தேவதாஸ் கதையை இப்படிக்கூட படமாக்க முடியுமா என அயரவைத்த அற்புதமான படம் அது.


4. பீட்டர் ஜாக்ஸன் (52)
பீட்டர் ராபர்ட் ஜாக்ஸன் நியூசிலாந்தில் பிறந்த ஹாலிவூட் இயக்குனர்.ஆரம்ப காலத்தில் ப்ரைன் டெட் போன்ற மகா மொக்கை படங்களை இயக்கிய ஜாக்ஸன் உலகம் புகழும் இயக்குனரானது லார்ட் ஆப் த ரிங் படங்கள் மூலமாக.இப்படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கிய கிங் காங் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகி வசூல் மழை பொழிந்தது.தற்போது த ஹாபிட் என்ற மூன்று பாக படங்களில் பிஸியாக இருக்கிறார்.அதில் முதலாவது படம் கடந்த டிசம்பரில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


3. ஜேம்ஸ் கேமரூன் (59)
ஜேம்ஸ் பிரான்ஸிஸ் கேமரூன் கனடாவில் பிறந்த ஸ்காட்டிஸ் ஆசாமி. த டெர்மினேட்டர், டெர்மினேட்டர் 2, ஏலியன்ஸ்,டைட்டானிக், அவதார் உள்ளிட்ட புகழ் பெற்ற ஆங்கில திரைப்படங்களை படைத்தவர்.கடந்த ஆண்டு மார்ச் 26இல் உலகிலேயே மிக ஆழமான கடல்பகுதியான மரியானா ட்ரெஞ்ச் -க்கு (ஆழம் 11கிலோ மீட்டர்)தனி ஆளாக சென்று திரும்பிய அசாதாரண துணிச்சல்காரர்.இவரது ஒவ்வொரு படமும் ஏற்கனவே வெளிவந்த இவரது படங்களின் வசூலை முறியடிக்கும்.தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களை இவர் அளவுக்கு எந்த இயக்குனரும் தந்ததில்லை என்பதே இவரது திறமைக்கு சாட்சி.

2. மகேந்திரன்.C.(74)
தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு எடுத்து சென்ற மாபெரும் கலைஞன்  மகேந்திரன்.இவரது முதல் படமான முள்ளும் மலரும் (இந்த தலைப்பிலுள்ள இரட்டை அர்த்தத்தை கவனித்தீர்களா?)ஆகட்டும் அடுத்தடுத்து இவர் இயக்கத்தில் வந்த உதிரிப்பூக்கள்,மெட்டி,ஜானி,நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற டாப் கிளாஸ் படங்களாகட்டும்  அனைத்துமே சர்வதேச தரமானது என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்ய அடியேன் தயார்.இந்த படங்கள் அனைத்துமே மசாலா படங்கள் ஆதிக்கம் செலுத்திய காலக்கட்டத்தில் வெளிவந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.


1. ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் (67)
ஸ்டீவென் ஆலன் ஸ்பீல்பெர்க் அமெரிக்காவில் பிறந்த ஜெர்மானிய யூதர்.உலக சினிமா வரலாற்றில் இவர் அளவுக்கு புகழ் ஈட்டிய இயக்குனர் எவருமில்லை என்று சொன்னால் அது மிகையாகாது.சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதுக்கு ஆறு முறை பரிந்துரைக்கப்பட்டு இரு முறை விருது வென்றவர்.1980க்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்த அத்தனை பேரும் இவரை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து கௌரவித்திருக்கிறார்கள்.பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினங்களை தத்ரூபமாக திரையில் காட்டி ரசிகர்களை மிரளவைத்தவர்.இவரது இயக்கத்தில் வந்த அற்புதமான படங்களில் அடியேனை பெரிதும் கவர்ந்த படங்கள்; JAWS (1975).E.T(1981)SCHINDLERS LIST(1993)  SAVING PRIVATE RYAN(1998)MUNICH(2005)


இந்த பட்டியலில் அடியேனை கவர்ந்த இயக்குனர்களை வரிசைப்படுத்தியிருக்கிறேன்.இதில் உங்களுக்கு நிச்சயம் முழு உடன்பாடு இராது என்பதை நானறிவேன்.எனினும் உயிரோடு இருக்கும் நபர்களை மட்டுமே நான் கவனத்தில் கொண்டு அவர்கள் படங்களை தேர்ந்தெடுத்தேன்.யஷ் சோப்ரா,ரிஷிகேஷ் முகர்ஜி,டோனி ஸ்காட்  போன்ற  என்னை கவர்ந்த இயக்குனர்கள் பலர் இன்று உயிரோடு இல்லாததால் அவர்களை தவிர்த்திருக்கிறேன்.மேற்கண்ட பலரது படங்கள் நிச்சயமாக நம்மில் பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதும் இதற்க்கு காரணம்!!!நீ மட்டும் எல்லா படத்தையும் பாத்திருக்கியா என்று கேட்டுவிடாதீர்கள்.ஹிஹி!!!