Sunday, 10 March 2013

கண்ணா....."அல்வா" திங்க ஆசையா !!!




தமிழ் நாட்டில் காலம் காலமாக நடக்கும் கோயில் உற்சவங்கள் நிறைய உண்டு.தஞ்சை,மதுரை,திருவரங்கம்,பழனி,திருவண்ணாமலை போன்ற திவ்ய ஸ்தலங்களில் நடக்கும் வருடாந்தர திருவிழாக்களில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இறைவனை பிரார்த்தித்து தங்கள் ஆன்மிக கடமையை பயபக்தியுடன் நிறைவேற்றுவார்கள்.சாதாரண காலத்தில் கோயில் பக்கம் எட்டியே பார்க்காதவர்கள் கூட இம்மாதிரியான வருடாந்திர பண்டிகைகளில் கலந்துகொண்டு விடுவார்கள்.
கோயில்களிலும்,சர்ச்-களிலும்,மசூதிகளிலும்,தர்காக்களிலும் நடக்கும் வருடாந்தர உற்சவங்களில் கூடும் மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது தமிழ்நாட்டில் ஆன்மிகமும்,ஆஸ்திகமும் இன்னும் பட்டுபோகவில்லை என்பதை நம்மால் உணரமுடியும்.

தமிழ் நாட்டில் இன்னொரு வகையான வருடாந்தர உற்சவங்கள் உண்டு. உதாரணமாக,காவேரி பிரச்னை,இட ஒதுக்கீடு பிரச்னை,முல்லை பெரியாறு பிரச்னை,இலங்கை பிரச்னை போன்ற பிரச்னைகளுக்காக நடக்கும் போராட்ட உற்சவங்களே அவை.வருடத்தின் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் மிக சரியாக மேற்கண்ட போராட்ட உற்சவங்களை ஆரம்பித்து விடுவார்கள்.பிரச்னை தீர்கிறதோ,இல்லையோ என்பதை பற்றியெல்லாம் கவலையில்லாமல் இந்த உற்சவங்கள் பாட்டுக்கு ஒரு தொடர்கதையாக,ஒன்று முடிந்தால் மற்றொன்று என்ற ரீதியில் நடந்து கொண்டிருக்கும்.

இந்த உற்சவங்களில் லேட்டஸ்டாக நுழைந்திருப்பது இலங்கைக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள்.தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் இன்று தமிழனுக்கு இருக்கும் ஒரே பிரச்னை புலி தலைவரின் 12 வயது மகன் ஸ்ரீலங்கா ராணுவத்தால் கொல்லப்பட்டதுதான்.ஏதோ,இந்த பூமி பந்தில் நடந்த முதல் கொலையே இதுதான் என்பதுபோல ஒவ்வொரு தமிழனும் மாய்ந்து மாய்ந்து இக்கொலைக்கு கண்டனம் தெரிவிக்கிறான்.கதறி கண்ணீர் வடிக்கிறான்.துக்கம் தாங்காமல் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்கிறான்.

தமிழ்நாட்டின் சாபக்கேடான திராவிட கட்சிகளும்,பொதுவுடைமை கட்சிகளும்,லெட்டர்பேட் உதிரி கட்சிகளும் இன்றைய தினம் ஈழ தமிழனை காப்பாற்றுவதற்காகவே தாங்கள் அவதாரம் எடுத்திருப்பதை போல் போராட்டங்களை நடத்தி கொண்டிருக்கின்றன.பொழுது விடிந்து பொழுது போனால் போராட்டம்,ஆர்பாட்டம்,சாலை  மறியல்,உண்ணாவிரதம் என ஒட்டுமொத்த தமிழகத்தையே திகைக்கவைக்கின்றன.

நீதியை காப்பாற்றவே அவதரித்திருக்கும் வழக்கறிஞர்கள் வழக்கம்போல நீதிமன்றத்தை புறக்கணிக்கிறார்கள்.நீதிமன்ற வாசலில் கூடி ராஜபக்சேயின் கொடும்பாவியை எரித்து சாலையை குப்பைமேடாக்குகிறார்கள்.வருங்கால வழக்கறிஞர்களான சட்ட கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து ஸ்ரீலங்காவுக்கு எதிராக தொண்டை கிழிய கோஷமிடுகிறார்கள்.இந்த மாணவ புரட்சி புயல்கள் தாங்கள் செய்யும் வழக்கமான அடாவடிகளை இனப்படுகொலைக்கு எதிரான கிளர்ச்சி என்ற போர்வையில் அரங்கேற்றி கொண்டிருக்கிறார்கள்.சட்ட கல்லூரி மாணவ புரட்சியாளர்களோடு ,அரசு மற்றும் அரசு நிதியுதவி பெரும் கலைக்கல்லூரி மாணவ புரட்சியாளர்களும் இணைந்து இலங்கைக்கு எதிரான "அமெரிக்க தீர்மானத்தை ஆதரி"என்று மத்திய அரசுக்கு மிரட்டல் விடுகிறார்கள்.தாங்கள் புரட்சியாளர்கள்தான் என்று அடையாளம் காட்ட ஒவ்வொரு மாணவ புரட்சியாளனும் "சேகுவேரா"டீசர்ட் அணிந்து கொண்டு வீதி வீதியாக வளம் வருகிறான். (இதில் ஒரு ஜோக்; இந்த "சேகுவேரா"புரட்சி (!)செய்ததாக அனைவரும் நம்பிகொண்டிருக்கும் நாடான கியூபா ஸ்ரீலங்காவின் மிகநெருங்கிய நட்பு நாடு!)

இப்படி தமிழகத்தில் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் நடக்கும் இந்த போராட்ட உற்சவங்களின் தொடர்ச்சியாக முத்தமிழ் மூதறிஞரின் தலைமையிலான "டெசோ"வரும் 12ஆம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம் செய்யபோவதாக அறிவித்துள்ளது.சர்க்கஸ் கோமாளிகளே பொறாமைப்படும் அளவுக்கு இலங்கை பிரச்னையில் ஏராளமான பல்டிகளை அடியோஅடியென அடித்திருக்கும் நமது முத்தமிழ் வித்தகர் தனது லேட்டஸ்ட் படைப்பான "இரண்டாம் டெசோ"வை வைத்து காமெடி செய்ய முனைந்திருக்கிறார்.

தமிழனை ஏய்த்துபிழைப்பதையே குறிக்கோளாக கொண்ட முத்தமிழ் காவலர் கடந்த காலத்தில் மத்திய அரசை எதிர்த்து போராட்டங்களை அறிவிப்பதையும்,பிறகு அதை வாபஸ் வாங்குவதையுமே தொழிலாக கொண்டவர்.வரும் மக்களவை தேர்தலில் தனது கட்சியின் வெற்றிவாய்ப்பு குறைவாக இருப்பதால்,காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த தொகுதியை ஒதுக்கி அதிக இடத்தை பெறவே,மத்திய அரசுக்கு எதிராக திடீர் கண்டனக்குரல்  கொடுக்கிறார் முத்தமிழ் காவலர்.மற்றபடி ஈழ தமிழனுக்கும் மேற்படி வேலைநிறுத்த போராட்டத்திற்கும் ஒரு புண்ணாக்கு சம்பந்தமும் இல்லை.நாளையே காங்கிரஸுடன் பேரம் படிந்துவிட்டால் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை நிறுத்திவிட்டு ,மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் என்று அறிவித்தாலும் அறிவிப்பார்.

என்ன செய்வது,ஆனானப்பட்ட காங்கிரசுக்கே அல்வா கொடுப்பவர் நமக்கெல்லாம் கொடுக்காமலா இருப்பார்!

6 comments:

  1. அரசியல் வாழ்கையில இதெல்லாம் சாதாரணமப்பா......

    ReplyDelete
  2. புனித சாத்தான் அவர்களே......


    எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களது வலை தளத்தில் நரேந்திரன் என்ற வாசகரின் ஈழம் பற்றிய கருத்தை கவனித்தீர்களா? http://www.jeyamohan.in/?p=34695

    ReplyDelete
    Replies
    1. டியர் சிவ.சரவணகுமார்!!!
      நன்றி!! நானும் அதை படித்தேன்.ஈழத்துக்காக போராட்டம்,உண்ணாவிரதம் என்று தங்கள் படிப்பை பாழாக்கிகொண்டிருக்கும் மாணவ கண்மணிகள் அவசியம் படிக்கவேண்டிய கடிதம்!!

      Delete
    2. லயன் ப்ளாக்கில் மட்டும்தான் நகைச்சுவை எழுத்தா?இங்கு ஏன் இப்படி படு சீரியஸ்ஸாகவே போய்கிட்டிருக்கு? (ஆமா இன்னும் சில பெரிய புள்ளிகள் பாக்கியிருக்கிறார்களே அவர்கள் எப்போது வெளி வருவார்கள்? :) )

      Delete
    3. டியர் ஸ்டாலின்!!!
      கவலைப்படாதீர்கள்.உலகிலேயே மிக பெரிய புள்ளிதான் அடியேனின் அடுத்த டார்கெட்!!!

      Delete
  3. உள்ளூர் "." பத்தி கேட்டா உலக் "." பத்தி சொல்லுறீங்க

    ReplyDelete