Saturday, 2 March 2013

சாத்தான் வேட்டை




லயன் காமிக்ஸில் வெளிவந்த டெக்ஸ் வில்லர் கதைகளில் மிகவும் அதிக வரவேற்பை பெற்ற கதை சாத்தான் வேட்டை.2003ஆம் ஆண்டு தீபாவளி மலராக ரூ.20 விலையில் வந்த இக்கதை  வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்ற கதைகளில் முதல் பத்து இடங்களில் கண்டிப்பாக இடம்பெறும்.சிவப்பிந்தியர்கள் மற்றும் டெ க்சின் நண்பர் கிட் கார்சன் போன்றோர் இந்த கதையில் ஆப்சென்ட்.டெக்ஸ் மட்டுமே தனியாக களமிறங்கும் இந்த கதைக்களம் முந்தைய டெக்ஸ் கதைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.
சமூக விரோதிகள் நால்வர் டெக்ஸின் நண்பரான ஈதன் கால்ட்டர் என்பவரையும்,அவரது மனைவி மற்றும் மகளையும் ஈவிரக்கமின்றி கொன்றுவிட்டு ,சிவப்பிந்தியர்கள் அவர்களை கொன்றது போல் ஜோடனை செய்துவிட்டு தப்பிவிடுகிறார்கள்.தற்செயலாக அப்பகுதிக்கு வரும் டெக்ஸ் வில்லர் தனது நண்பரின் மரணத்துக்கு காரணமான கயவர்களை பழிதீர்க்க கிளம்புகிறார்.இதற்கிடையே,ஈதன் கால்ட்டரை கொன்ற கும்பல் தாங்கள் யாராலோ பின்தொடர படுவதாக யூகித்து கணவாய் பகுதியில் மறைந்துகொண்டு டெக்சுக்காக காத்திருக்க ,சூழ்ச்சி அறியாமல் எசகு பிசகாக அவர்கள் வசம் சிக்கிக்கொள்ளும் டெக்ஸ் கடுமையாக தாக்கபடுகிறார்.டெக்ஸ் ஒரு ரேஞ்சர் என்று அறிந்துகொள்ளும் நால்வர் கும்பல் அவர் விபத்தில் இறந்ததுபோல் காட்ட அவரையும்,அவரது குதிரையையும் மலை உச்சியிலிருந்து பள்ளத்தில் தள்ளிவிடுகிறார்கள்.அதிர்ஷ்டவசமாக மணற்பாங்கான இடத்தில் விழும் டெக்ஸ் வில்லரை ஹிராம் நோரிஸ் என்ற குடியானவன் காப்பாற்றி தனது ஊரான பிக் க்ரீக்குக்கு அழைத்து செல்கிறான்.


பிக் க்ரீக் நகரத்தில் ரே பாரட் என்ற ரௌடியின் கும்பல் ஆதிக்கம் செலுத்துகிறது."நாதாரித்தனம் பண்ணுனாலும் நாசூக்கா பண்ணனுண்டா "என்ற கொள்கையுள்ள ரே பாரட் டெக்ஸ் வில்லரை தாக்கிய கயவர்களில் ஒருவனான ப்ராங்க் பாரட்டின் மூத்த சகோதரன்.தனது மூன்று சகாக்களையும் விட்டு பிரிந்து சொந்த ஊர் திரும்பும் அவனை ஒரு சலூனில் நடக்கும் மோதலில் டெக்ஸ் வில்லர் அடையாளம் கண்டுகொள்கிறார்.தனது சகோதனிடம் அனைத்து  உண்மைகளையும் கூறும்  ப்ராங்க் பாரட் டெக்ஸ் வில்லரை கொன்றால் ஒழிய ரே பாரட்டுக்கு வேறு வழியில்லை என்ற நெருக்கடியை ஏற்படுத்துகிறான்.ஆத்திரமடையும் ரே பாரட் தனது கைக்கூலியான ஷெரீப் மூலமாக டெக்ஸ் வில்லரை ஒழிக்க முயல்கிறான்.
ஆனால்,டெபுடி ஷெரீப் மூலமாக இவர்களின் சதியை அறிந்துகொள்ளும் டெக்ஸ் வில்லர் சிலபல மோதல்களுக்கு பிறகு ப்ராங்க் பாரட்டை பிணைகைதியாக்கி மாரிஸன் என்பவனது பண்ணையில் அடைத்து ரே பாரட்டுக்கு கடிதம் மூலம் அங்கே வருமாறு மிரட்டுகிறார்.தம்பியை மீட்க அங்கே தனது கும்பலுடன் செல்லும் ரே பாரட்டுடன் டெபுடி ஷெரீபும் செல்கிறான்.

பண்ணை வீட்டை முற்றுகையிடும் பாரட் கும்பலிடம் தனது நண்பனை கொன்ற குற்றத்திற்காக ப்ராங்க் பாரட் சட்டப்படி தண்டிக்க படவேண்டும் என்றும் சலூனில் நடந்த மோதல் தொடர்பாக தன்னை தண்டிக்க கூடாது என்று பேரம் பேசும் டெக்ஸ் வில்லர் தான் சரணடைவதாக கூறி வெளிவர போவதாக சொல்ல அவர் வெளிவரும்போது சரமாரியாக சுடுகிறான் ரே பாரட்.ஆனால்,செத்து விழுவதோ அவனது சகோதரன் ப்ராங்க் பாரட்.நைச்சியமாக தனது உடையை அவனுக்கு மாட்டி தனது அண்ணன் கையாலேயே சாகடிக்க வைக்கும் டெக்ஸ் வில்லர் அடுத்து மற்றொரு கயவனான லூக் தோர்ப் என்பவனை தேடி ரிச்பீல்ட் என்ற நகரத்திற்கு விரைகிறார்.

முன்னதாக ப்ராங்க் பாரட்டை விட்டு பிரியும் மற்ற மூன்று கயவர்களும் போகும் வழியில்  ஒரு கோச்வண்டியை தாக்கி  இருவரை கொன்றுவிட்டு கொள்ளையடித்ததை பங்கிட்டு கொள்கிறார்கள்.லூக் தோர்ப் தனது முன்னாள் காதலியான லிண்டாவை பார்க்க ரிச் பீல்டுக்கு செல்கிறான்.அங்கே அவனது முன்னாள் காதலி மார்ட்டின் என்பவனோடு திருமணம் நிச்சயிக்க பட்டிருப்பதை அறிந்து கோபமடைகிறான்.அவனோடு ஒற்றைக்கு ஒற்றை மோதலுக்கு சவால் விட அச்சமயம் நகர ஷெரீபுடன் டெக்ஸ் வில்லர் அங்கே நுழைகிறார்.டெக்சை கண்டு அதிர்ச்சியடையும் தோர்ப் லிண்டாவை பிணைக்கைதியாக்கி தனது நண்பர்கள் இருவருடன் தப்பிசெல்கிறான்.

பாழடைந்த சுரங்க நகரம் ஒன்றினுள் ஒளிந்துகொள்ளும் தோர்பையும்,அவனது சகாக்களையும் மார்ட்டின் உதவியுடன் தாக்குகிறார் டெக்ஸ்.மோதலில் தோர்ப் கொல்லப்பட அவனது சகாக்களை ஷெரீபிடம் ஒப்படைத்து மற்றொரு கயவனான ரஸ் ஜென்கின்ஸ் என்பவனை தேடி புறப்படுகிறார் நமது இரவு கழுகார்.


ரஸ் ஜென்கின்சை தேடி எஸ்கலாண்டே என்ற நகருக்கு விரையும் டெக்ஸ் வில்லர் அந்நகர ஷெரீபிடம் அவனை குறித்து விசாரிக்கிறார்.அப்படி ஒரு ஆசாமியை தான் கேள்விப்பட்டதே இல்லை எனக்கூறும் ஷெரீப் நகரை விட்டு விரைவில் வெளியேறுமாறு டெக்சை மறைமுகமாக மிரட்டுகிறார்.ஷெரீபிடம் விடைபெற்று ஊருக்குள் நுழையும் வில்லர் அங்குள்ள பேன்சி ஸ்டோர் ஒன்றில் தனது நண்பர் ஈத்தன் கால்ட்டரின் லாக்கெட் செயின் தொங்குவதை காண்கிறார்.கடை உரிமையாளரிடம் நடக்கும் விசாரணையில் ரஸ் ஜென்கின்ஸ் ஷெரீபின் சகோதரன் என்ற உண்மை வெளியாகிறது.  
ஷெரீபை அவர் அறியாமல் கண்காணிக்கும் இரவு கழுகார் அவர் தனது சகோதரனை மறைத்து வைத்திருக்கும் ஹோட்டலை கண்டுபிடிக்கிறார்.அதிரடியாக துப்பாக்கி முனையில் அவரை மடக்கி ரஸ் ஜென்கின்ஸ் தங்கியிருக்கும் அறையை நெருங்கும்போது நடக்கு மோதலில் ஷெரீபை தவறுதலாக ரஸ் சுட்டுவிட்டு தப்பிக்க முயல்கிறான்.
சரமாரியான துப்பாக்கி சண்டைக்கு பிறகு டெக்ஸ் வில்லரால் ஷெரீபும்,அவரது சகோதரன் ரஸ் ஜென்கின்சும் கொல்லப்படுகிறார்கள்
அடுத்து நம் இரவு கழுகார் நான்கு போக்கிரிகளில் கடைசி ஆசாமியான சிவப்பிந்தியனை தேடி கனான் பீடபூமிக்கு விரைகிறார்.
.

போகும் வழியில் சோக்கா என்ற அபாச்சே இன சிறுவனை மூன்று போக்கிரிகளிடமிருந்து காப்பாற்றுகிறார்.அவனது துணையுடன் ஜாக்கோவின் கிராமத்தை அடையும் டெக்ஸ்வில்லர் கிராமத்தலைவரை சந்தித்து ஜாக்கொவை தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்கிறார்.டெக்ஸ் வில்லரிடம் ஜாக்கோ தன் நாகன் எனக்கூறும் அபாச்சே தலைவர் அவனை ஒப்படைக்க சம்மதிக்கிறார்.
அப்போது அங்கே வரும் ஜாக்கோ டெக்சை கொல்ல  முயல,அவனது தந்தையால் தடுக்கப்படுகிறான்.தன்னை காப்பாற்றி கொள்ள அவனுக்கு உரிமையுண்டு எனக்கூறும் கிராமத்தலைவர் ஜாக்கோவுக்கும் ,டெக்ஸ் வில்லருக்கும் இடையே கத்தி சண்டை நடத்தி வெற்றி பெறுபவர் தோல்வி அடைந்தவரின் தலைவிதியை நிர்ணயித்து கொள்ளலாம் என கூறுகிறார்.
ஆக்ரோஷமான கத்தி சண்டை முடிவில் டெக்ஸ் வில்லர் ஜாக்கோவை கொன்று நீதியை நிலைநாட்டுகிறார்.
இறுதியில் தனது நண்பர் மற்றும் அவரது மனைவி,மகள் ஆகியோரின் கல்லறையில் நின்று அஞ்சலி செலுத்தும் இரவு கழுகார் அங்கிருந்து புறப்பட்டு தனது நவஜோ பிராந்தியத்திற்கு திரும்புகிறார்.


ஜோ குபெர்ட் என்ற அமெரிக்க ஓவியரின் கைவண்ணத்தில் வெளிவந்த இந்த சாத்தான் வேட்டை அடியேனின் ஆல் டைம் பேவரைட் கதைகளில் ஒன்று.வசனங்கள் குறைவான இந்த கதையின் ஓவியங்கள் மிக அற்புதமாக அமைந்துள்ளன.குட்டி குட்டியான பிரேம் செட்டுகளும்,டாப் ஆங்கிள்களும் ஓவியரின் மேதாவிலாசத்திற்கு சாட்சி கூறுகின்றன.
வாசகர் கடிதம் பகுதியில் வழக்கம்போல் தாரமங்கலம் பரணீதரன் இடம்பெற்றுள்ளார் என்பதை நான் கூறித்தான்  நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன...?
நான் சின்ன பையனாய் இருந்தபோது (இப்போதும் நான் சின்ன பையன்தான்:)தீபாவளி நாட்களில் ரஜினி,கமல் படங்களுக்கு நிகராக என்னை கவர்ந்தது நம்ம லயன்,முத்து காமிக்ஸ்களின் தீபாவளி மலர்கள்தான்.
இப்போதும்  தீபாவளி வருகிறது.மலர்களை தான் காணவில்லை. 




13 comments:

  1. எனக்கும் மிகவும் பிடித்த கதை ..ஆமாம் ,சீரியசான கதை விமர்சனத்தில் நகைசுவைகாக எனது பெயரை இனைதிர்கிலோ ..:) (பின் குறிப்பு :போன பதிவில் நான் அளித்த பதிலுக்கு மறுப்பாக தாங்கள் அளித்த பதிலுக்கு மீண்டும் நான் அளித்த பதிலுக்கு பதிலை எதிர் பார்கிறேன்..)

    ReplyDelete
  2. நான் படித்த கதைகளில் மிக சிறந்த புத்தகமாக (டெக்ஸ் வரிசையில்) இதை சொல்லலாம். என்னிடம் இந்த புத்தகம் இல்லை, அநேகமாக இந்த பதிவை ரசித்து எழுதியவரே எனக்கு இந்த புத்தகத்தை படிக்க கொடுத்து இருக்கலாம் :)

    இந்த பதிவின் ஆசிரியர் (!) கூறியது போல சித்திரங்கள் அவ்வளவு அருமை, சில இடங்களில் கதை வரிகளை படிக்காமல் சித்திரத்தை மட்டும் சில நிமிடம் ரசித்து, பின் தொடந்ததுண்டு.

    பதிவு ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள் :

    புத்தகத்தின் சில பக்கங்கள் / சிறந்த சித்திரங்கள் உள்ள பக்கங்கள் என உங்கள் பதிவில் இடம் பெற செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    பதிவு ஆசிரியருக்கு ஒரு கேள்வி : இந்த ஓவியரின் வரிசையில் வேறு டெக்ஸ்ட் கதைகள் வரவில்லையா ????

    (டெக்ஸ் ஒரு கதையில் பனி பெய்யும் நகரில் சாகசம் செய்வாரே ? அந்த ஓவியம் இதை போலவே உள்ளததாக நியாபகம். சந்தேகத்தை தீர்த்து வைப்பீரா ...

    திருப்பூர் ப்ளுபெர்ரி

    ReplyDelete
    Replies
    1. டியர் சாந்தன் !!!
      நீங்கள் குறிப்பிடுவது பனிக்கடல் படலம் என நினைக்கிறேன்.ஓவியபாணியை பார்க்கும்போது நிச்சயமாக அது ஜோ குபெர்ட் வரைந்ததாக இருக்கமுடியாது.டெக்ஸின் 600 சொச்சம் கதைகளுக்கும் இரண்டு டஜன் ஓவியர்களாவது படம் வரைந்திருப்பார்கள்.நான் அடுத்த முறை இத்தாலிக்கு செல்லும்போது விசாரித்து சொல்லுகிறேன்:):-)

      Delete
  3. படித்தவுடன் மறந்துவிடும் பழக்கத்தால் சாத்தான் வேட்டையை படித்ததாக ஞாபகம் இல்லை, சாத்தான்ஜி!

    பிசாசுத்தனமாக இக்கதை பிடிக்கவில்லையென்றால், சாத்தானால் இப்படி பத்தி பத்தியாக எழுதுவதும் சாத்தியமாயிராது!

    வாழ்க உம் ரசணை!

    ReplyDelete
    Replies
    1. டியர் விஜய் !!!
      ///படித்தவுடன் மறந்துவிடும் பழக்கத்தால் சாத்தான் வேட்டையை படித்ததாக ஞாபகம் இல்லை, சாத்தான்ஜி! ///
      சஞ்சய் ராமசாமி உங்களுக்கு ரிலையன்ஸா....?:-)

      Delete
    2. // சஞ்சய் ராமசாமி உங்களுக்கு ரிலையன்ஸா....?:-) //

      ஹா ஹா ஹா :))
      .

      Delete
  4. லயனில் 20 ரூபாய் டெக்ஸ்வெளியீடுகளில் வந்த இருகதைகளும் அருமையானவை சாத்தான்வேட்டை, இருளின்மைந்தர்கள்

    ReplyDelete
    Replies
    1. டியர் மஞ்சள் சட்டை மாவீரன் !!!
      சரியாக சொன்னீர்கள்.இரு கதைகளும் டாப் 10 பட்டியலில் உள்ள கதைகள் !!!

      Delete
    2. உங்கள் இருவரது கருத்துக்களையும் வழிமொழிகிறேன்.................இரண்டுமே அருமையான கதைகள்.........இருளின் மைந்தர்களும் 2003 -ல் வெளிவந்தது என்றே நினைக்கிறேன்...[ இ.ம ..சித்திரத்தின் தரம் சற்று சுமார்தான் ....அனால் கதை மிக அருமையாக இருக்கும்.........

      Delete
    3. // .இருளின் மைந்தர்களும் 2003 -ல் வெளிவந்தது என்றே நினைக்கிறேன //

      You are right Buddy :))
      .

      Delete
  5. வாவ் சாத்தான் தனது வேட்டையை தொடர ஆரம்பித்துவிட்டார் ;-)
    .

    ReplyDelete
  6. இந்த கதை படிக்கவில்லை. கதையை இப்பொழுது அறிந்து கொண்டேன் . நன்றி!

    ReplyDelete
  7. சாத்தானுக்கே சவாலா? ஹிட்டு கதையை எழுத்துக்களைக் கொண்டு அலங்கரித்த நண்பருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete